பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து7

(இ - ள்.) தேன் தன்னிடத்தே துளித்தலைச் செய்கின்ற தாமரை மலரிடத்துத் தங்குகின்ற பிரமன் நாரணன் முதலானோர் பலகாலு நினைத்தலால் தம்முள்ளிடம் வடுவுடையனவாகத் தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தங்கச்செய்து, உடல் முழுவதும் வடுவுண்டாக வள்ளற் றன்மைபொருந்திய அழகிய ஒப்பற்ற தாமரை மலர்போன்ற திருக்கரத்தில் வலிய பிரம்பை வைத்துள்ள, மேலானவனும் கூட்டமாகிய வெள்ளிய ஒளியைக் கக்குகின்ற அழகிய வெள்ளிமலையாகிய கைலையைக் காத்தலை மேற்கொண்டு யாவர்க்குந் திருவருள் செய்யும் வீரனுமாகிய நந்தி யெம்பெருமானது நீண்ட திருவடிகளை வணங்குவாம்.

(வி - ம்.) கள் - தேன்; வேத்திரம் - பிரம்பு; தளி - துளி; சேக்கும் - தங்கும்; தழும்ப - பலகாற் சிந்தனை செய்தலால் வடுவுண்டாக; அமைத்திட்டு - அமைத்து; வள்ளல் - வள்ளற்றன்மை; வேத்திரம் கமலக்கரம் அமைத்த எனக் கூட்டுக; காவல் - தொழிற் பெயர்; வரதனை வீரனைக் கழல் பணிவாம் என்க; வேண்டுவார் வேண்டிய தீதலானே வள்ளலங் கமலக்கர மென்றார்.

(6)

நவ வீரர்

 ஈர வான்மதி மிலைச்சிய பொலஞ்சடை
           யிறைவனா ரருள்கூரக்
 கார வாவிய குழலுமை நூபுரக்
           கதிர்மணி யிடைத்தோற்று
 நார வாவியி னறுமலர்க் காவிநேர்
           நயனமா தர்களீன்ற
 வீர வாகுவை முதலிய வீரர்தம்
           விரைமலர்ப் பதம்போற்றி.

(இ - ள்.) குளிர்ச்சி பொருந்திய மேலாகிய ஞானசந்திர கலையினைச் சூடிய பொன்போன்ற சடையையுடைய சிவபெருமான் அருள் மிகுதலால் (கருமைக்குத் தோற்றுக்) கருமை நிறத்தையுடைய மேகமும் விரும்பிய அளகபாரத்தையுடைய உமையம்மையார் திருப்பதங்களிலணிந்த சிலம்புகளிற் பதித்துள்ள ஒளிபொருந்திய நவமணிகளிடத்துத் தோற்றிய நீர்நிறைந்த தடாகத்தினுண்டாகிய வாசனையையுடைய நீலோற்பல மலர்போன்ற கண்களையுடைய நவசத்திகளு மீன்றருளிய வீரவாகுவை முதலாகவுடைய ஒன்பது வீரர்களுடைய வாசனை பொருந்திய மலர்போன்ற திருவடிகள் நம்மாற் போற்றப்படுவன.

(வி - ம்.) தம் - சாரியை; இறைவன் ஆர் அருள்கூரவெனப் பிரிப்பாருமுளர்; காரவாவிய வெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினார்; மணியிடைத் தோற்று மாதரெனக் கூட்டுக. நாரம் - நீர்; வீரவாகுவை - ஐ சாரியை; மாதர்களின் றொகை கந்தபுராணம் உற்பத்திப் படலத்திற் காண்க.

(7)