பக்கம் எண் :

8தணிகைப் புராணம்

சமய குரவர்

 முன்னாலுந் துளைக்கரத்தோன் முருகவேள்
 பிடித்தெழுந்து மொய்ம்பிற் றாவப்
 பின்னாலுங் கதிர்ச்சடிலப் பிஞ்ஞகனா
 ரடித்தொண்டின் பெருக்க வீறு
 பொன்னாலும் பெண்ணாலு மறிவுறுத்திவ்
 வுலகினிடர் பொன்றி யாண்ட
 அந்நால்வர் பதகமல மகந்தழீஇப்
 புகழ்ந்திறைஞ்சி யரந்தை தீர்வாம்.

(இ - ள்.) முன்னர்த் தொங்குகின்ற துளைபொருந்திய கையையுடைய மூத்தபிள்ளையாரும், விருப்பத்தைத்தரு மிளையபிள்ளையாரும், கையாற் பற்றித் திருத்தோளிற் றாவாநிற்க, பின்னர்த் தொங்குகின்ற ஒளிபொருந்திய சடையையுடைய இறைவர் தந்திருவடித் தொண்டின் பெருக்கத்தின் சிறப்பை உலகத்தில் பொன்னினாலும், பெண்ணினாலு மறிவுறுத்தி, இவ்வுலகத்திலுள்ளாருடைய துன்பத்தைப் பொன்று வித்து, அடிமை கொண்டருளிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகராகிய நால்வருடைய திருவடியாகிய தாமரைப் பூவை அகத்தே தழுவிப் புகழ்ந்து வணங்கிப் பிறவித் துன்பத்தினின்றும் நீங்குவாம்.

(வி - ம்.) தாவ நாலுஞ்சடில மெனக்கூட்டுக; நாலுதல் - தொங்குதல்; வீறு - பெருமை; பொன்றி - பொன்றுவித்து, குடிபொன்றி யென்றாற்போலக் கொள்க; பொன்னாலும் பெண்ணாலு மறிவுறுத்தல் - சம்பந்தர் படிக்காசுபெறல், பொற்கிழிபெறல், மழவன் மகள் நோய் தீர்த்தல், எலும்பைப் பெண்ணாக்கல் முதலியனவாம்; அப்பர் படிக்காசு பெறல், உழவாரப் படையிலகப்பட்ட பொன்மணிகளை வாரியெறிதல். அரம்பை முதலிய பெண்களை வெறுத்தொதுக்கல் முதலியனவாம்; சுந்தரர் ஆற்றிலிட்டபொருள் குளத்தில் வரச்செய்தல், செங்கலைச் செம்பொன்னாக்கல், பரவை சங்கிலியாரை யுரிமையாகக் கோடல், வனப்பகை சிங்கடியாரை மகண்மைமுறை கோடல் முதலியனவாம்; மணிவாசகர் பாண்டியன் பொருளைக்கொண்டு திருப்பணிபுரிதல், ஊமைப்பெண்ணைப் பேசும்படி செய்தல் முதலியனவாம்; பெருக்கம் - பெருமை; தாவப்பின்னாலு மென்பதற்கு தாவுதலினாற் பின்னேயாடு மெனப் பொருள் கூறுவாருமுளர்; அகரம் பண்டறி சுட்டு.

(8)

சண்டேசுரர்

 புண்ணியம் பாதக மாகப் போற்றிய
 அண்ணலந் தக்கனா ரகத்து நாணிய
 புண்ணியம் பாதக மாகப் போற்றிய
 அண்ணலந் தண்டித னடிகள் போற்றுவாம்.

(இ - ள்.) யாகமாகிய புண்ணியச் செயல் சிவபெருமானைப் பேணாமையால் பாதகமாய் முடியும்வண்ணஞ் செய்த அழகிய பெருமையை