பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்701

 நார ணன்றொழ வாரணற் றருநல னளித்தான்
 ஆர ணன்றொழ நாரணற் றரும்வர மளித்தான்
 சார நாமிமை யார்த்தெறு தலைமைமுன் னளித்தான்
 வார முற்றவர் தொழநமைத் தெறமழ வானான்.

(இ - ள்.) திருமால் தொழாநிற்க வேதத்தினை யுணர்ந்த பிரமனைப் படைக்குமின்பினைக் கொடுத்தான். பிரமன் தொழாநிற்கத் திருமாலினைப் படைக்கும், முதன்மையை யவனுக்குக் கொடுத்தனன். முன்னர் நாம் தவஞ்செய் தவனையண்மத் தேவர்களை வருத்தும் முதன்மையை நமக்குக் கொடுத்தனன். நமக்குப் பிறக்கிட்ட தேவர்கள் அவன்பா லன்புகொண்டு வணங்க அவனே நம்மைக் கோறல் செய்ய இளவலாகின னென்க.

(வி - ம்.) நாம் சாரத் தலைமை முன்னளித்தானென மாற்றுக.

(169)

 தவத்தி னாலய னுதற்கணோர் சேயுமாய்ச் சார்ந்தான்
 தவற்றி னாலொரு சிறுவனா யவன்றலை தடிந்தான்
 தவத்தி னாலொரு மருகனுந் தக்கன்பா லானான்
 தவற்றி னாலொரு சிறுவனா யவன்றலை தடிந்தான்.

(இ - ள்.) அயன் (படைக்குந் தொழினிறைவு பெறாமையால்) அத்தொழில் முற்றுறும் பொருட்டுத் தவத்தினைச் செய்ய அத்தவத்தினால் அவன் நெற்றிக்கண்ணின் ஒப்பற்ற நீலலோகித னென்னும் பெயரினையுடைய மகவாய்ப் பொருந்தினான். தனக்குப் பிறப்பிடமாகிய அப்பிரமன் தவத்தினைச்செய்ய அத்தவம் காரணமாக அவன் பக்கலில் ஒப்பற்ற மருமானாகத் தோன்றினன். அத்தக்கன் செய்த தவறு காரணமாக ஒப்பற்ற சிறுவனாகி அத்தக்கன் தலையை வெட்டினா னென்க.

(வி - ம்.) இப்பாட்டால் அன்பு கண்டுழி யருளலும், அஃதில் வழி வெகுளலுமாகிய குணங்கள் கூறப்பட்டன வென்க.

(170)

 வளமும் வீரமு மைந்தரும் வாழ்க்கையும் வேண்டில்
 தளையி னீக்குதி விண்ணவர் தங்களை யன்றேல்
 ஒளிறு கைப்படை யோடுநே ருதியொல்லை யென்றான்
 விளியு மூழினன் கேட்டிலன் வேறெதிர் கிளப்பான்.

(இ - ள்.) செல்வத்தினையும், வீரத்தினையும், மக்களினையும், உயர் வாழ்வையும், விரும்பின் தேவர்களைச் சிறையினின்றும் நீக்குவாய் அங்ஙனம் செய்யா தொழியின் விரைவாக விளங்குகின்ற கையின்கண் ணுள்ள படைக்கலங்களோடு போர் செய்தியென்று கூறினான். இழவூழினனாகிய சூரன் கேட்டிலனாகிச் சிங்கமுகனுக் கெதிராகச் சில மொழிகளைச் சொல்வான்.

(வி - ம்.) வளம் - செல்வம். வாழ்க்கை - உயிர்வாழ்தல். விளியுமூழ் - போகூழ்.

(171)