பக்கம் எண் :

702தணிகைப் புராணம்

வேறு

 ஏயே நினதெண் ணமெனக் கினிதே
 ஆயே யிலன்கா லழலப் பினலைந்
 தோயே லெனமீன் முலையூட் டநுகர்
 சேயே பரமென் றுதெளிந் தனையே.

(இ - ள்.) தாய் என்பவள் ஒருத்தியில்லாதவன். காற்றின்கண்ணும், நெருப்பின்கண்ணும், நீரின்கண்ணு மலைவுற்று நீ தளர்வடையற்க வென்று இன்மொழி கூறிக் கார்த்திகை மீன்கள் முலையுண்பிக்க நுகர்ந்த சேயினையோ! பரமென்று துணிவு கொண்டனை. "ஏஏ" நின்னுடைய கருத்து எனக்கினிதாக விருந்தது என்றா னென்க.

(வி - ம்.) 'ஏஏ' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. காலழலப்பினலை தலை "வளிதொடர்த் தொள்ளொளி படர்ந்து தெளிநீர்புக்கு" என்னும் நான்காம்
பாட்டானுணர்க.

(172)

 படைபல் கலைநோற் றல்வரம் பயிலான்
 சடைசுற் றியதந் தைதருங் கதிர்வேல்
 விடல்கற் றொருசூ ளுறுவெற் பினொடு
 மடல்கற் றனனாண் மையிலா தவனை.

(இ - ள்.) படைக்கலப் பயிற்சியும் பல்கலைப் பயிற்சியும் தவஞ் செய்தலையும், தன்னையடைந்தார்க்கு வரம் கொடுத்தலையும் பயிலாதவன் சடையினைக் கூட்டிக் கட்டிய தந்தையாகிய இறைவன் தந்த ஒளியினையுடைய வேற்படையை விடுதலொன்றையே கற்று ஒரு முனிவன் சாபத்தினையேற்ற கிரவுஞ்சமென்னும் மலையினோடு ஆண்மை சிறிதுமில்லாதவனாகிய தாரகனைக் கொல்லப் பயின்றுள்ளான்.

(வி - ம்.) படை முதலியன ஆகுபெயர். முனிவன் - அகத்தியன்.           

(173)

 நெற்றிக் கணிருந் தநெருப் புவிழி
 தெற்றென் றறியத் தருசெவ் வியினால்
 கற்றைச் சடையாற் கொருகான் முளையே
 பற்றற் றுயரப் பரன்றா னலனே.

(இ - ள்.) நெற்றியின்கண்ணுள்ள நெருப்புக்கண் தெளிவாக யாவரும் அறியத்தந்த அழகினால் கூட்டமாகிய சடையினையுடைய இறைவனுக் கொருமகனே யாவன், எல்லாப் பற்றுக்களையும் இயல்பாக நீங்கினமையா லுயர்ந்த அவ்விறைவ னிவனல னென்க.

(வி - ம்.) 165-ஆவது செய்யுளில் "உவன்றானே சிறுகுழவியாய் நயந்தான்" என்ற சிங்கமுகன் கூற்றுக்கு இப்பாட்டால் இறைவனுக்குக் கான்முளையே அல்லாமல் அவ்விறைவன் இவனலனென்றானென்க.

(174)

 மாயைக் கொருவைப் பெனுமா யையனை
 ஆயுற் றனணற் றவமாற் றியெலாம்.