பக்கம் எண் :

704தணிகைப் புராணம்

 ஆற்றினிற் றோற்ற லானு மறுமுகன் பரமே மாயை
 தோற்றிய நம்மை மாயை தோய்விலா வவனே வெல்லும்.

(இ - ள்.) தவஞ்செயல் சிறிதுமின்றிக் கொன்று குவித்தலைச் செய்தாடும் வெள்ளிய வேலினை இறைவன் பக்கலிற் கோடலானும், இறைவன் அருவத்திருமேனி, உருவத்திருமேனி, அருஉருவத்திருமேனியாகிய ஒன்பான் திருமேனியைத் தன்னிச்சையின்படி கோடல்போல இம்முருகனும் தன்னிச்சையின்படி பல வடிவங்களைத் தோற்றுவித்தலானும் அறுமுகன் அப்பரம்பொருளேயாவன். மாயையின்கட் டோற்ற முற்ற நம்மை அம்மாயையின்கட் டோய்விலாதவனாகிய அவனே வெல்வ னென்க.

(வி - ம்.) இவனிச்சையான் வடிவங்கோடலை அகத்தியன் அருள் பெறுபடலம் 64 ஆவது செய்யுளின் முதலிற் காண்க.

(178)

 ஆங்கவ னெனவிண் ணோரை யட்டுயி ரெழுப்ப வல்லேம்
 ஓங்குல காக்க வல்லே முறுவரர்க் குணர்த்த வல்லேம்
 பூங்கழ லீசன் றாழப் புகன்றுவீற் றிருக்க வல்லேம்
 பாங்குமை யிறைவ னாப்பண் மகவெனப் பயில வல்லேம்.

(இ - ள்.) அம்முருகனைப்போல இமையவருயிரைப் போக்கி மீண்டு மெழச்செய்ய யாம் வல்லமையுடையே மல்லேம். உயர்ந்த உலகங்களைப் படைக்க யாம் வல்லமையுடையே மல்லேம். முனிவர்களுக்கு உண்மைப் பொருளை யாம் செவியறிவுறுக்க வன்மையுடையே மல்லேம். பொலிவுற்ற வீரக்கழலினை யணிந்த இறைவன் வணங்க அவனுக்குப் பிரணவப் பொருளைச் செவியறிவுறுத்தி வேறொருவர்க்கில்லாத சிறப்புடன் யாம் வீற்றிருக்க வல்லமை யுடையே மல்லேம். இறைவன் பக்கலிலுள்ள உமையம்மையார்க்கும், இறைவனுக்கும் நடுவண் மகனெனத் தங்குதற்கும் யாம் வல்லமை யுடையே மல்லேம்.

(வி - ம்.) உமையிறைவனாப் பண்மகவு - சோமாஸ் கந்தர்.

(179)

 பரமனும் வேறே வந்த பாலனும் வேறே யாக
 பரமனல் கருளி னன்றே பாரளிப் பவர்முன் னாமெச்
 சுரரையு மடக்கி னாமத் துரிசிலாப் பரமன் றோன்றல்
 வரமுடை நம்மைப் போரின் மாட்டுதல் வியப்போ தேரின்.

(இ - ள்.) நீ கூறியாங்கு இறைவனும் வேறேயாகுக; நம்பால் போர்க்கு வந்த பாலகனும் வேறேயாகுக. நீ சிறப்பித்துக் கூறிய அவ்விறைவன் நமக்களித்த அருளினாலன்றே உலகினைக் காப்பவனாகிய திருமாலினை முதலாகக்கொண்ட எல்லாத் தேவர்களையும் யாம் அடக்கி யாண்டாம். அக்குற்ற மிலவாகிய இறைவன்சேய் அவன்றந்தைபால் பெற்ற வரத்தினையுடைய நம்மைப் போரின்கட் கோறல் புரிதல் ஆராயின் வியப்பாகுமோ! என்க.

(வி - ம்.) மாட்டுதல் - கொல்லுதல்.

(180)