பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்705

 பன்னெடு மூழி கால முந்துறப் பயிலு மாயன்
 அன்னமேக் குயர்த்தோ னாதி யவர்க்கெலாம் பின்பு தோன்றி
 முன்னவ னருள்பெற் றன்றே யவர்க்கெலா முதல்வ ரானோம்
 தன்னருண் மகனைப் பால னென்றெள்ள றகைமைப் பாற்றோ.

(இ - ள்.) பலவூழிகளுக்கு முன்னரே பொருந்திய திருமால், அன்னப் பறவையை மேலுயர்த்துக் கட்டியவனாகிய பிரமன் முதலாகிய தேவர்க்கெல்லாம் யாம் பின்னர்த் தோற்றமுற்றும் யாவரினும் முற் பட்டவனாகிய அவ்விறைவன் அருளினைப் பெற்றதனாலல்லவா அப் பிரமன் முதலிய தேவர்கட்கெல்லாம் முதன்மையுடையவராயினோம். அவ்விறைவ னருளிய முருகனைப் பாலனென் றிகழ்தல் தகுதியின் பகுதியாமோ? ஆகாதென்க.

(வி - ம்.) ஊழிக்காலம் : பண்புத்தொகை. மேக்கு - உயர. முன்னவன் - சிவன்.

(181)

 மகனென வுருவே றாகி மறைவழி யொழுகார் தம்மை
 அகநெகத் தாக்கு மங்கத் தவயவத் தொன்றான் மாய்க்கும்
 தகவுறு மடியர் தம்மாற் சாடுஞ்சூழ்ச் சியினும் வெல்லும்
 உகலுறா வரத்தோர் யாரே யுமையொரு பாகன் சீறில்.

(இ - ள்.) உமையம்மையாரை யொருபாகத்திலுடைய இறைவன் சீற்றங்கொள்ளின் கெடாத வரத்தினை யுடையவரெவருளர். ஆதலால் வேத நெறியின்கண் ணொழுகாதவரை மகனென வடிவு வறுகொண்டு மனம் வருந்த மோதுவான் உடம்பின்கண்ணுள்ள அவயவங்களுள் வைத்தொன்றினானுங் கோறல் செய்வான் தம்மையொத்த தகுதியினையுடைய அடியார் வாயிலாகவும், கோறல் செய்வான்; விரகினானும் வெல்வான்.

(வி - ம்.) மறைவழி - வேதநெறி. அவயவம் - விரன் முதலியன. சாடும் - கொல்வான். சூழ்ச்சி - விரகு.

(182)

 முகம்விழி மலர்க்கை மூன்று முப்பது முன்பு நாஞ்செய்
 மகவினைக் கருள வந்த வள்ளலுக் கீண்டுச் சாடப்
 புகுமிறைக் கவைகண் மூன்று முப்பதே பொலிவு மற்றே
 திகழுரு வானுஞ் சேயைச் சிவனெனத் தெளிய லாமே.

(இ - ள்.) முன்னர் நாம்செய்த யாக தளவாடத்தின்கண், அருளவந்த வள்ளற்றன்மையை யுடைய இறைவனுக்குத் திருமுகம், கண்ணும், கையுமாகிய இவைகள் முப்பதென்னும் அளவைக் கொண்டனவாகும். இஞ்ஞான்று நம்மைக் கோறல்செய்யப் புகுந்த இறைவனுக்கவைகள் மூன்று முப்பதென்னு மளவினைக் கொண்டனவே யாம். இவனிறப் பொலிவும், அவனிறப் பொலிவின் றன்மையுடையதே. விளங்குகின்ற வடிவத்தானும், சேயைச் சிவபெருமானென்று தெளியலா மென்க.

(வி - ம்.) இறைவனுக்கு, முகம் ஐந்து, விழி பதினைந்து, கைகள் பத்து ஆக முப்பதா மென்க.

(183)