பக்கம் எண் :

706தணிகைப் புராணம்

 வரமரு ளுருவிற் போதின் மலரடி பணிந்து போற்றி
 அருளிய தரும மெல்லா மகனமர்ந் தியற்றி மேலும்
 திருவினைப் பெறலா மன்னோ தீவினைப் பயத்தா லென்ன
 உருவுவே றாகப் போந்தா னுமையொரு பாகம் வைத்தோன்.

(இ - ள்.) உமையம்மையாரை யொருபாகத்தில் வைத்தவனாகிய இறைவன் நங்கட்கெல்லாம் வரமளிக்கும் வடிவத்துடனே எழுந்தருளி வரின் மலர்போன்ற அடிகளில் வணங்கித் துதித்து அவன் திருவாய் மலர்ந்தருளிய அறங்களையெல்லாம் உளத்தே விரும்பிச் செய்து இன்னும் எல்லாச் செல்வங்களையு மடையலாம். தீவினைப் பயனால் என்று கண்டோர் சொல்லும் வண்ணம் வடிவம் வேறாக எழுந்தருளினன்.

(184)

 அருமறை முதலி னோமென் றறைதரு பதமுஞ் சீர்த்த
 திருமுக மாற னுள்ளோர் முகமெனத் திகழுந் தேவை
 உருவினு மிளமை யானுஞ் சிறுவனென் றுதித்த மம்மர்
 பொருதொழிற் பெருமை கண்டா லல்லது போத லின்றே.

(இ - ள்.) யாவருந் தன்னுண்மைப் பொருளை அறிதற்கருமையான வேதத்தினை யோதற்கண் 'ஓம்' என்று சொல்லும் பதமும், சிறப்பினையுடைய திருமுகங்களாறனுள் வைத்து ஒருமுகமென்று யாவரும் கூற விளங்குகின்ற தேவனை உருவத்தானும், இளமையானும், பருவத்தானும், சிறுவனாவனென்று தோன்றிய மயக்கம் அவன் போரியற்றும் பெருமையைப் போரின்கட் காணி னல்லது போதலின் றென்க.

(வி - ம்.) முருகன் நடுமுகம் பிரணவபத வடிவாக அமைந்துள்ள தென்பார் 'ஓம்' என்றறை தருபதம், "முகமாற னுள்ளோர் முகமெனத் திகழும்" என்றார்.

(185)

 அமிழ்தினை நஞ்ச மென்று பருகினு மின்பே யாக்கும்
 குமரனைப் பகைஞ னென்றே கொள்ளினும் பெரும்பே றெய்தும்
 விமலமெய் யுருவங் காண விளம்புரை கேட்க ஞான
 இமிழிசை வேலிற் பொன்ற வெத்தவஞ் செய்தா மென்றான்.

(இ - ள்.) தேவ வுண்டியை ஒருவன் நஞ்சமென்று கருதியுண்ணினும் அவ்வுண்டி அவனுக்கின்பத்தினையே உளவாக்கும். குமரனைப் பகைஞ னென்றே கொள்வோமாயினும் பெரும்பயனை யடைவோம். இயல்பாகவே மலநீங்கப் பெற்ற அவன் றிருவுருவினைக் காண, அவன் திருவாய் மலர்ந்தருளுகின்ற திருவாக்கினைக் கேட்க, ஞானவடிவமாகிய ஒலிக்கின்ற புகழையுடைய வேற்படையாலிறக்க முன்னர் எத்தன்மையான தவத்தினைச் செய்தோ மென்றான் சிங்கமுகன்.

(வி - ம்.) எய்தும் - தன்மைப்பன்மை வினைமுற்று, காணக்கேட்கப் பொன்ற என்ன தவஞ்செய்தோம் எனமுடிக்க. 171-ஆவது செய்யுள் முதல் 176-ஆவது செய்யுள்வரை சூரனிழித்துக் கூறியவற்றைக் கொண்டு 177-ஆவது முதல் இச் செய்யுள்வரை சிங்கமுகன் உயர்த்துக் கூறி அவன் வாக்கியங்களுக்குப் பொருளுரைத்தமை காண்க.

(186)