| | என்றலுஞ் சூரன் சீறி யிமையவர் பாலிற் பட்டாய் | | | துன்றுபோர்க் கஞ்சு கின்றாய் தூத்தவ முயலப் போதி | | | கொன்றுவன் பூதர் தம்மைக் குமரனை வேறு மென்றான் | | | ஒன்றுதன் முதன்மை யொன்றே மதிப்பவர்க் குணர்த்தல் வீணே. |
(இ - ள்.) இங்ஙனஞ் சிங்கமுகன் சூரனுரைகளுக்குப் பொருளிற்றாமென்று கூறச் சூரன் சீற்றங்கொண்டு நீ இமையவர் பகுதியிற் பொருந்தினாய். அஃதன்றியும் பகைவர் பொருந்துகின்ற போரினுக் கச்சமுறுகின்றாய். தூய்மையான தவத்தினைச் செய்யப் போவாயாக. யாம் வலிய பூதர்களைக் கொன்று முருகனை வெற்றிகொள்வே மென்றான். (பலவற்றையுஞ் சீர்தூக்காது) தன்மாட்டுப் பொருந்திய தலைமை யொன்றனையுமே பெரிதாகக் கருதுகின்ற மடவோருக்கு அறிவுடையோர் நல்லறிவுச் சுடர் கொளுத்தல் வீணேயாமென்க. (187) | | அரிமுகன் றமைய னெண்ண மறிந்தழி வெய்துங் காலைப் | | | பெரிதுநன் றுறுத்தி னாலுஞ் சிறிதுங்கைக் கொள்ளார் பீடு | | | விரிதரு காலைத் தாமே விளைவறிந் தொழுகு வாரென் | | | றுரிமையி னிறைஞ்சிப் போர்சென் றுடற்றுவல் பெரும வென்றான். |
(இ - ள்.) சிங்கமுகன் தன் முன்னோனாகிய சூரனுட்கருத்தினையறிந்து உலகர் போகூழாற் றுன்பமுறுங்காலத்து (அறிவுடையா னொருவன்) நன்மையைப் பெரிதுஞ் செவியறிவுறுப்பானாயினும் அவன் கூறும் உண்மை மொழியினைச் சிறிதுங் கைக்கொள்ளார். ஒருவனுக்கு ஆகூழாற் பெருமை உலகிற் பரவுங்காலைத் தாங்களே அப்பெருமை வளர்தற்குக் காரணங்களைத் தெரிந்து நடப்பார்கள் என்று தன்னுட் கருதி உரிமையோ டவனை வணங்கிப் பெருமானே! யான் போர்க்களத்தின்கண் இன்னே சென்று அம்முருகனை வருத்துவே னென்றான் என்க. (வி - ம்.) 'பெரும்' என்றது குறிப்புமொழி. (188) | | தம்பியை மகிழ்ந்து புல்லித் தனிநகர் சேறி யீங்கு | | | வம்பலன் புகுந்தா னாகில் வருகென விடுத்திட் டாங்குப் | | | பம்பினர் தமையும் போக்கிப் பரிவொடு மிருந்தான் வல்லை | | | வெம்புபோர் மூட்டு வான்போல் வெய்யவன் கடலிற் பூத்தான். |
(இ - ள்.) சூரன் தன்னை வணங்கிய இளவலாகிய சிங்கமுகனை மகிழ்ந்து தழுவி ஒப்பற்ற நகரத்திற்குச் செல்வாய் இவண் பகைவன் வரின் நீ வருக என்று விடை கொடுத்தனுப்பி அப்பொழுதே அவையின் கண்ணிறைந்திருந்த பலரையும் போகச்செய்து தன்னிளவலாகிய தாரகனிறந்த துன்பினோடிருந்தனன். விரைவில் கொதிக்கின்ற போரினை மூளச் செய்வான்போலச் சூரியன் கடலிற் றோன்றினா னென்க. (வி - ம்.) வம்பலன் - பகைவன். வருக : வியங்கோள். பம்புதல் - நிறைதல். பூத்தல் - தோன்றல். (189) |