பக்கம் எண் :

708தணிகைப் புராணம்

 நாரணன் முதலோர் போற்றச் செந்திலி னயந்த நம்பி
 ஆரண முழக்கம் விம்ம வடியவர் துழனி பொங்கத்
 தேரணி படைகள் சூழச் சென்றவ னகர்க்க ணித்தின்
 ஏரணி யேம கூட மியற்றிப்பா சறைய னானான்.

(இ - ள்.) நாரணன் முதலிய தேவர்கள் துதிக்கத் திருச்சீரலை வாயின்கண் விரும்பி யெழுந்தருளியிருந்த முருகக்கடவுள் வேதமுழக்கமிக அடியார்குழாங்களின் முழக்க மதிகரிக்கத் தேரும், அழகிய ஏனைய படைகளும், சூழ எழுந்தருளி அச்சூரன் நகரி னணித்தாயுள்ள வனப் புற்ற ஏம கூடமென்னும் மலையின்கண் (பாடி வீடுசெய்து) அப்பாசறை யின்கண்ணுள னாயினன் என்க.

(வி - ம்.) நம்பி - முருகன். ஆரணம் - வேதம். துழனி - முழக்கம்.

(190)

 நாரத னட்டான் போல நண்ணியாங் கிறைவ னுற்ற
 சீரினை விளம்பிப் போத வொற்றருஞ் சென்று செப்பப்
 போரணி கொடித்தேர்ச் சூரன் பொள்ளெனப் பானு கோப
 வீரனை விடுக்க வன்னான் விறற்படை யெழுக வென்றான்.

(இ - ள்.) நாரதனென்னு முனிவன் சூரனுக்கு நட்பாளன்போல அவன்மாட்டுப் பொருந்தி அவ்விடத்து இறைவனெழுந்தருளிய சிறப்பினைச் சொல்லிவரத் தூதுவர்களுஞ் சென்று சொல்லப் போர் குறித்து அழகிய கொடியினை எடுத்துக்கட்டிய தேரினையுடைய சூரன் விரைவாகப் பானுகோப னென்னும் வீரனைச் செலுத்த அப்பானுகோபன் வலியோடுகூடிய படையினை எழுகவென்றன னென்க.

(191)

 அடிகழ னரல வீக்கி யணிவிரல் புட்டில் சேர்த்தி
 இடைநெடுங் கச்சிற் சுற்றி யெறுழ்கொள்சா லிகைமெய் யிட்டு
 வடிநெடும் படைக ளேந்தி வார்நிறை தூணி தூக்கிப்
 படுமணி யிரதம் புக்கான் பல்லியத் தொழுதி யார்ப்ப.

(இ - ள்.) பானுகோபனென்பான் அடியின்கண்ணே வீரக்கழலை முழங்க யாத்து அழகிய விரலின்கண்ணே விரற்சட்டை யணிந்து இடையினை நீண்ட பட்டிகையா னிறுக்கிச் சுற்றுதல்செய்து, வலியினை யுடைய உடம்புக்கீடுகளை உடம்பின்கண்ணிட்டுக் கூரிய நீண்ட படைக் கலங்களைத் தாங்கி நீண்ட அம்புகள் நிறைந்த அம்பறாக் கூட்டைத் தொங்கக்கட்டிப் பல இசைக் கருவிகளின் கூட்டங்கள் முழங்க ஒலியுண்டாவதற் கேதுவாகிய மணிகள்கட்டிய தேரின்கண் ணேறினா னென்க.

(வி - ம்.) நரலல் - ஒலித்தல். புட்டில் - விரற்கட்டி. சாலிகை - மெய்ப்பை. 'திரைத்த சாலிகை, நிரைத்தபோன் நிறைந்திரைப்ப தேன்களே, விரைக்கொள் மாலையாய்' என்னும் சூளாமணிச்செய்யுளா னறிக. நிறைதூணி - அம்புநிறைந்த கூடு. படு - ஒலித்தல்.

(192)