(இ - ள்.) தென்புலவாணருக்குச் (செய்யுஞ் செயல்களை) எதிர் முறையாகச் செய்கின்ற செயலினைப்போலத் தென்திசைக் கிறைவனாகிய இயமனுடைய எருமைக் கடாவிற்கினமான தாங்களும் (எதிர்முறையாகச்) செய்தல் தகுதியென்று கருதி முன்னர் வயலின்கண் இடப்பக்கமாகச் சுற்றிய கடாக்கள் இக்களத்திலும் யாவர்க்கும் இன்பத்தையெய்துவிக்கும் கதிரை மிதித்தலின், இடப்பக்கத்தே எழுந்து சுற்றின. (வி - ம்.) எதிர்முறையாவது சிரார்த்த தருப்பண முதலிய கருமங்களில் தூபதீப நீர்வளாவுதல் முதலியவற்றை இடஞ் சுற்றுவது மரபு. வலது பக்கத்திலிருந்து மாட்டை யடித்தோட்டினால் வலது பக்கத்திலிருந்து அம்மாடுகள் இடது பக்கமாகத் திரும்புமென்க. ஏர்பு - எழுதல். "வலனேர்பு திரிதரு" என்ற திருமுருகாற்றுப்படை யடி இப்பொருள் தருதலை யறிக. வளாவிய - சுற்றிய. தென்புலத்தார் அயனாற் படைக்கப்பட்ட கடவுட்சாதி யென்பர் திருக்குறளுரையாசிரியர். (129) | | செயற்றலைநின் றுழப்பவர்க டேக்கெறிவ ரெனுமொழிக்கண் | | | அயிர்ப்பதுமுண் டேதொடக்கி யடித்துகைப்பக் குலாலன்வினை | | | இயக்குதிகி ரியிற்பெயர்கா லிருங்கதிர்கௌ வுபுகுதட்டி | | | வயிற்றடக்கி யுடல்வீக்கி மதப்பனவன் பகட்டினங்கள். |
(இ - ள்.) வலிய எருமைக்கடாக்கள், தொழிலினிடத்து நிலைபெற்று அத்தொழிலான் வருந்துபவர்கள் உண்டு தெவிட்டுவரென்னு முதுமொழியிடத்து ஐயங் கோடலுமுளதோ? இல்லையென்க. (உழவர்கள் கடாக்களை) அடித்துச் செலுத்த அக்கடாக்கள், மண்வினைஞன் தொழில்காரணமாகச் சுற்றுகின்ற சக்கரத்தைப்போலச் சுற்றுகின்ற காலத்து மிக்க கதிர்களை வாயாற் கௌவி வாயுதப்பி வயிற்றின்கணடக்கி உடலைப் பெருக்கச் செய்து செருக்கடைவன. (வி - ம்.) செயல் - தொழில். உழப்பவர் - தொழில்செயுங்கால் வருந்துவோர். தேக்கெறிதல் - உவட்டெடுத்தல். ஏகாரம் எதிர்மறை. குதட்டி -வாயுதப்பி. வீக்கி - விம்மி. மதப்பன - செருக்கடைவன. (130) | | சுற்றமெலாம் வேறாக்கித் தொடர்ந்தவரை யோகிருத்தும் | | | நற்றவர்போல் வைப்பதடி நவைதுவரத் தணப்பித்துக் | | | கொற்றவனா தியர்க்களித்துக் குலாவியபண் டியிற்கொடுபோய் | | | முற்றநெடுங் கூடுநிலன் முதுகுளைய வுறுத்துவரால். |
(இ - ள்.) (தனக்குக் களைகணாகிய) பெண்டு பிள்ளைகள் முதலிய சுற்றத்தாரை யெல்லாம் வேறாகச் செய்து (தம்மைப் பின்பற்றிய) மாணவர்களை யோகின்கண்ணே தங்கச் செய்யும் நல்ல தவத்தையுடைய சிவராஜ யோகிகளைப் போல வைக்கோலும் பதருமாகிய குற்றங்களை முற்ற நீங்கச்செய்து (ஆறிலொரு கூறரையன் முதலியோர்க்குக் கொடுத்து எஞ்சிய நெற்குவியலை) விளங்கிய பண்டியிற்கொண்டு சென்று முற்றத்தின்கண் நீண்ட நெற்கூட்டில் நிலத்தின் முதுகு வருந்தும்வண்ணம் தங்கச் செய்வார்கள் என்க. (வி - ம்.) வையையும் பதடியையும் சுற்றமாகவும், நெல்லைக் கூட்டில் தங்கச் செய்தல் மாணவர்களை யோகிற் றங்கச் செய்தலாகவும் |