பக்கம் எண் :

710தணிகைப் புராணம்

பானுகோபனுக்குப் பகைவனாகிய சூரியனுக்கு உதவிசெய்தல் தகாதெனக் கருதி மதத்தினையும், நுரையினையும் ஒழுக்கிப் பூழியை அடாகினவாகக் குறித்தலால் தற்குறிப்பேற்றம்.

(194)

 மாயன்முத லோர்பனிப்ப மகதியாழ்
           முனியடுத்து மாயை வல்லான்
 காயிரும்போர் பலகடந்தான் கமலன்முத
           லோர்படையுங் கைக்கொண் டாண்மை
 மேயினன்பொன் னுலகழித்தான் வெங்கதிர்க்குப்
           பகைஞன்வரு கின்றான் போர்க்கு
 நீயலது பிறர்வேற லரிதென்ன
           வரைகிழித்த நெடுவே னம்பி.

(இ - ள்.) விண்டு முதலிய தேவர்கள் அஞ்சி நடுங்காநிற்ப மகதியென்னும் வீணையினையுடைய நாரதன் மாயையில் வல்லவன் வருத்தத் தக்க பல போரின்கட் பகைவரை வெற்றி கொண்டவன்; பிரமன் முதலியோர் படைக்கலங்களையும் கைப்பற்றி ஆண்மைத் தன்மையைப் பொருந்தியவன்; பொன்னுலகத்தை யழித்தவன்; வெங்கதிர்க் கடவுளுக்குப் பகைவனென்னும் பெயரினை யுடையான். அத்தகையோன் போரினுக்கு வருகின்றனன், அடிகளல்லது அவனை வெல்லுதல் பிறர்க்கரிதாகும் என்று விண்ணப்பஞ் செய்யக் கிரவுஞ்சத்தைப் பிளந்த வேற்படையையுடைய முருகன்.

(வி - ம்.) பனிப்ப - நடுங்க. கமலன் - பிரமன். வேறல் - வெல்லுதல். நம்பி - முருகன்.

(195)

 வறிதுநகை யொடும்வீர வாகுமுக
           நோக்கிவரு வானை யெண்மர்
 செறிகழற்கா லிலக்கர்படைத் தலைவரா
           யிரவெள்ளஞ் சேனை யோடு
 முறையினிடங் கழிகோடி யெனவிடுப்ப
           வவன்மொழிந்த சேனை மொய்ப்பப்
 பறையியம்பக் குடைகவிப்பக் கொடிநுடங்கத்
           தேரிவர்ந்து படர்த லுற்றான்.

(இ - ள்.) புன்சிரிப்பினோடும் வீரவாகுதேவர் முகத்தினை நோக்கி வருகின்றவனை எண்மரும் செறித்த கழலினையுடைய இலக்கரும் படைத் தலைவருமாகிய ஆயிரவெள்ளம் படையுடன் போர்க்குரிய நெறிப்படி எதிர்கொள்வாயெனச் செலுத்த அங்ஙனமே முருகன் திருவாய்மொழிந்த சேனைகள் சூழ இயமியம்பக் குடைநீழலைச் செய்யக் கொடிகள் அசையத் தேரின்மீதேறிச்
சென்றான்.

(வி - ம்.) வறிதுநகை - புன்னகை. கோடி - கொள்ளுதி. இவர்ந்து - ஏறி. இடங்கழி - நெருங்கல்.

(196)