பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்711

 போர்பூத்த மைந்தினுக்குந் தானொருவ னாதலிற்பொற் புறவெஞ் ஞான்றும்
 சீர்பூத்த தந்தைமுடிக் கணியுமலர்த் தும்பைமிலை திறலோன் சேனை
 ஏர்பூத்த வடிதோய வவுணரடித் தவிர்ந்தவினை யிரித்து வல்லே
 பார்பூத்த துறக்கமுற வெழுந்த துபோ லெழுந்ததெங்கும் படர்ந்த தூளி.

(இ - ள்.) போரின்கட் பொலிந்த ஏனைய செயல்களுக்கே யன்றி வலியினுக்குந் தானொருவனே யாதலினாலே அழகுற எக்காலத்தும் சிறப்பு விளங்கிய தன் தந்தையாகிய இறைவன் திருமுடிக்கணியும் தும்பைப் பூமாலையினைச் சூடிய வலியுடையனாகிய இளவல் சேனைகளின் புகழ்பொலிந்த அடிகள் நிலத்திற் றோய்தலினான் (அந்நிலம்) அவுணர்களடியின்கட் டங்கியதா னுளவாகிய தீவினையைக் கெடுத்து (அத்தீவினை நீக்கத்தால்) விரைவாக நிலம் எஞ்ஞான்றும் விளக்கமுற்ற துறக்கத்தினையடைய எழுந்ததைப் போலப் பரவிய தூளிகள் எங்கும் எழுந்தன வென்க.

(வி - ம்.) மைந்து - வலி. உம்மை இறந்ததுதழீஇயது 'ஏகாரம்' பிரிநிலை. தவிர்தல் - தங்குதல். திணை - தும்பை. துறை - தானைநிலை புறத்திணை 72ஆம் சூத்திரம், மேற்கோள் காண்க.

(197)

 இந்திரன்வவா கனமிதுவென் றொறுப்பனபோன்
           முகில்புடைக்கு மெழிற்ப தாகை
 அந்தரமெங் கணுமிடையு மவுணர்நெடும்
           படைக்கடலை யமர்க்குங் காலை
 வெந்திறல்வா ளிகடுமிக்குஞ் சேட்சென்மி
           னெனவெறிந்து விசும்பு ளோரை
 உந்துதல்போற் கொடிநுடங்கும் வீரர்படைக்
           குறுமுனிவ னுணநேர்ந் தன்றே.

(இ - ள்.) இந்திரன் ஊர்தி யிஃதாகு மென்றதனை யொறுப்பன போல மேகத்தினையடிக்கும் கொடிகள் வெளியிடை யெங்கணும் நெருங்கிய மிக்க அவுணர் சேனையாகிய கடலினை, வானின்கண்ணுள்ள தேவரை வெவ்விய வலியினையுடைய பாணங்கள் நுங்களைக் கெடுக்குஞ் சேய்மைக்கண் செல்லுங்கோ ளென்று அடித்துப் பிடர்பிடித்துந்துதல் போலக் கொடிகள் அசைகின்ற வீரர்படையாகிய குறுமுனிவன் உண்ண நேர்ந்ததாகுமென்க.

(வி - ம்.) கொடிகள் அந்தர மெங்கணு மிடையும்அவுணர் சேனையென்க. "விசும்புளோரை துமிக்கும் சென்மின்" என உந்துதல் போலக் கொடி நுடங்கும் வீரர் படை என்க. இவ்விருபடையும் அமர் செய்யுங்கால் அவுணர் நெடும்படைக் கடலை வீரர் படையாகிய குறு முனிவனுண்ண நேர்ந்ததாகு மென்க. படைக்குறுவன் எனப் பாடங் கொண்டு பிறவாறு முரைப்பாருளர். அவுணர் சேனை கடல்போலப் பெருக்கமாகவும், வீரர் சேனை குறைவாகவும் தோன்றலின் அமர்க்குங் காலை அவுணர் நெடும்படைக் கடலை வீரர்படைக் குறுமுனிவனுண்ண நேர்ந்தன்றே என்று கூறினார். படைகுறுமுனி யெனவும் பாடம்.

(198)