பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்721

 தயங்கு சண்டனெறி தண்டி றப்பவிற றங்கு மல்லினம ராடினான்
 புயங்கெ ழூஉம்பலிய சிங்க னத்தொழில்பு துக்கி யாருயிர்கு டித்தனன்.

(இ - ள்.) வருத்தமுற்று நீலனென்பான் மாயனென்பானுடைய நீண்ட மிடற்றின்கண் பற்களைப் பதித்து உயிரையுஞ் செந்நீரையு முண்டனன். முன்னர்ப் பேரறிவு மயங்கிய சிங்கனென்பானோடு சண்டனென்பவனுந் தெளிவுற்று நீண்ட தண்டங்களோடு போரிற் பொருந்தினார்கள். போரிற்றயங்குதலுற்ற சண்டனென்பான் எறிந்த தண்டமொடிய வன்மைபொருந்திய மற்றொழிலிற் போர்செய்தனன். வீரமாதர் தங்கிய புயத்தினையும், வன்மையையுமுடைய சிங்க னென்பான் அம்மற்றொழிலைப் புதிதாகச் செய்தவ னுயிரை யுண்டன னென்க.

(வி - ம்.) பலிய - வலிய. அத்தொழில் முன்னரியற்றிய மற்றொழில். இனிக்கெழு வென்பதனைச் சாரியையாக்கியும், வலியையுடைய சிங்கனெனக்
கொள்ளினுமாம்.

(217)

வேறு

 சிங்கனொ டமராடச் செல்லச முகன்றன்னை
 இங்குறு கெனநாப்ப ணெதிர்ந்தனன் மதுவென்போன்
 அங்கவன் பொழிவாளிக் கஞ்சல னவன்வையம்
 பொங்கிய சினத்தேறிப் புயலுரு மெனவார்த்தான்.

(இ - ள்.) சிங்க னென்பவனோடு போர் தொடங்கச் செல்கின்ற அசமுகனென்பவனை இங்கே பொருந்துவாயாக வென்று நடுவே மது வென்பவன் எதிர்ந்தனன். அவ்விடத்து அசமுகன் சொரிகின்ற அம்புகளுக் கஞ்சாதவனாகி அவ்வசமுகன் தேரின்கண்ணே மிகுந்த சீற்றத் தோடிவர்ந்து இடியோடுகூடிய மேகம்போல முழங்கினா னென்க.

(வி - ம்.) உரும் - இடி. அசம் - ஆடு. வையம் - தேர்.

(218)

 வேர்த்தன னவனோக்கி வீரரிற் பதரொத்தாய்
 போர்த்தொழிற் கிவணெங்குப் போந்தனை யெனமீண்டான்
 வார்த்தையுள் சுடமான முந்தமை வதனத்தான்
 ஆர்த்தடல் கெழுவாளி யலகில தொடுத்தெய்தான்.

(இ - ள்.) மதுவென்பவன் முழக்கஞ் செய்தலைக்கண்ட அசமுகன் வேர்த்தனன். அங்ஙனம் வெயர்வுற்ற அசமுகனை மதுவென்பவன் நோக்கி வீரர்களுள் வைத்து உள்ளீடில்லாதவனே! போர்த்தொழிலுக்கிவண் எப்படிப் போந்தாயென்று சொல்லத் தேரினின்று மீண்டனன். அசமுகனென்பான் மதுவென்பவன் கூறிய சொற்கள் உள்ளத்தை வருத்த, மானம் பிடர்பிடித்துத் தள்ள முழங்கி வலிபொருந்திய அம்புகள் அளவில்லனவற்றை வில்லிற் கோத்து எய்தனனென்க.

(வி - ம்.) எங்கு - எவ் வண்ணமுமென்னும் பொருளுணர்த்தி நின்றது. மை வதனத்தான் - ஆட்டுமுக முடையவன் (அசமுகன்).

(219)