பக்கம் எண் :

726தணிகைப் புராணம்

 வீர கோளரி நேர்ந்திருங் கணைமழை விடாதுமேற் சொரிகிற்பச்
 சூரன் மாமக னூறுநூ றாயிர கோடிவா ளிகடூண்டி
 நேரும் வாளிக ணீறுசெய் தாயிர நெடுங்கணை புயத்துய்த்தான்
 ஓரும் வீரனு மவனுரம் போழ்ந்துற வுறுத்தினன் கணையன்னான்.

(இ - ள்.) வீரகோளரி யென்பவன் எதிர்ந்து பெரிய அம்பு மழையை விடாமல் மேலே சொரியாநிற்ப, சூரன் மகனாகிய பானு கோபனென்பான் நூறு நூறாயிரங்கோடி கணைகளைச் செலுத்தி மேல்வந்து பொருந்திய கணைகளைப் பொடிசெய்து நீண்ட கணை ஆயிரத்தை வீரகோளரி புயத்தின்கட் செலுத்தினான். இதனை ஆராய்ந்த வீரகோளரியென்பான் அக்கோபன் நெஞ்சம் பிளக்குமாறு கணைகளைச் செலுத்தினன் அக்கோபன்.

(231)

 வில்லி னாலிவன் றோல்விகாண் பரிதென விண்டுமாப் படைதொட்டான்
 ஒல்லை மேற்படர் பகழிவாய் மடுத்தஃ துறுதலு மெதிரேவ
 வல்ல வீரனு மெடுக்குமுன் மார்பிடங் கொண்டவன் மதிதன்னைச்
 செல்லு லாய்க்கதிர் மறைத்தென மறைத்தது தினகரன் போர்வேட்டான்.

(இ - ள்.) விற்றொழிலான் இவ்வீர கோளரியின் தோல்வியைக் காண்டற் கரிதாகுமென்று ஆழிப்படையினைத் தொடுத்தான். அவ்வாழிப்படை தன்மேல் வருகின்ற கணைகளை வாய்ப்பெய்து அவ்வாழிப்படை பொருந்த வலிய வீரசிங்கன் எதிரேவப் படையெடுக்கு முன்னர் அவன் மார்பைத் தனக்கிடமாகக் கொண்டு அவ் வீரகோளரியின் மதியினை மேகம்பொருந்திச் சூரியனை மறைத்தாற்போல மறைத்தது. இதனைக் கண்ட தினகரனென்பவன் போரினை வேட்டெழுந்தனன்
என்க.

(வி - ம்.) செல் - மேகம். கதிர் - சூரியன்.

(232)

 போர்தொ டங்குமுன் வீரமார்த் தாண்டன்கைப்
           பொருசிலை துணித்தொட்டான்
 வார்நு தற்கணா யிரங்கணை வரித்தனன்
           மற்றொரு சிலைவாங்கி
 நேர்தொ டுக்குமு னதனையுந் தேரையு
           நீறுசெய் தெழுநூறு
 தார்ம ணிப்புயத் தேயினன் றாயவன்
           றடங்கைவின் முரித்திட்டான்.

(இ - ள்.) போரினைத் தொடங்குவதற்கு முன்னரே வீரமார்த் தாண்டனென்பவன் பானுகோபன் கையின்கண்ணுள்ள போரினுக்குரிய வில்லினைத் துண்டஞ்செய்து அக்கோபன் நீண்ட நுதலின்கண் ஆயிரங்கணைகளை எய்தனன். பானுகோபன் வேறொரு சிலையினை வளைத்து எதிரே தொடுத்தற்கு முன்னரே அவ்வில்லினையும் தேரினையும்