பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்729

 இங்க ணையென மதித்திடா தெதிர்தலே யிழிவினி யிவனோடும்
 அங்க வன்சம ராடின னெனும்புக ழாக்குவ னினக்கென்றான்.

(இ - ள்.) பானுகோபனே ! அவுணர்களாகிய நுங்கள் அரிய உயிர் மாட்டுக் கறுவுகொண்டு கொள்ள எழுகின்ற இயம தூதுவன்யான் அன்றியும், நும்மவராகிய அவுணர்களியாவரும் மிகுந்த அன்பினால் அடியை வணங்கும் இறைவ னருளிய மகனாகலின் என்னை இவ்விடத்துத் தலைவனென்று மதியாது என்னொடு போர் செய்தலே எனக் கிழிவாகும். இனி பானுகோபனுடனும் வலிய போரினை அவ்வீரவாகு செய்தான் என்னும் புகழினை நினக்குள தாக்குவனென்றா னென்க.

(வி - ம்.) தூதன் - இயமதூதன். அவன் - வீரவாகு.

(239)

வேறு

 என்ற லுங்கதிர் மாற்றல னிகல்பெ ருஞ்சிலை வாங்குபு
 கொன்றி றற்கணை பத்தனைக் கோத்து விட்டனன் வாகுவும்
 வென்றி விண்ணவர் தளையற வெய்ய தானவர் நாளற
 மன்ற வையகங் கோளற வாளி பத்துறுத் தறுத்தனன்.

(இ - ள்.) இங்ஙனம் வீரவாகு கூறப் பானுகோபன் போரினுக்குரிய சிலையினை வளைத்து அச்சத்தையும், வலியினையுஞ் செய்கின்ற பத்துக்கணைகளை வில்லிற் கோத்துச் செலுத்தினன். வீரவாகு வென்பான், வெற்றியையுடைய தேவர்கள் கட்டு நீங்கக் கொடிய அவுணர்கள் வாழ்நாள் கெடத் தெளிவாக இவ்வுலகம் இடையூறு நீங்கப் பத்துக் கணைகளைச் செலுத்தி
அறுத்தானென்க.

(வி - ம்.) கொன் - அச்சம். நாள் - வாழ்நாள். கோள் - இடையூறு. மன்ற - தெளிவாக.

(240)

 அறுத்து நூறுகோல் கோபன்மே லண்ண லேயின னூறுதொட்
 டிறுத்தொ ராயிரந் தானவ னேயி னானவை யாயிரத்
 தொறுத்து நம்மவ னயுதமே லுறுத்தி னானவை நேர்கணை
 தெறித்தி றுத்தபி னிலக்கமேற் சேர்த்தி னான்கதிர் மாற்றலன்.

(இ - ள்.) தலைவனாகிய வீரவாகு அப்பானு கோபன் செலுத்திய பத்துக் கணைகளையும், அறுத்து அப்பானு கோபன் மேல் நூறு கணைகளைச் செலுத்தினான். தானவனாகிய பானுகோபன் நூறு கணைகளைத் தொடுத்து, அந்நூறு கணைகளையு மொடித்து ஆயிரங் கணைகளை வீரவாகு மேற்றொடுத்தனன். நம்மவனாகிய வீரவாகு அவற்றை ஆயிரம் பாணங்களாற் கெடுத்துப் பதினாயிரங் கணைகளைப் பானுகோபன் மேற்செலுத்தினான். பானுகோபன் அப்பதினாயிரங் கணைகளை யொத்தகணைகளைச் செலுத்தி அப்பதினாயிரங் கணைகளையும் கெடுத்த பின்னர் வீரவாகு மேல் இலக்கங் கணைகளை எய்தனன் என்க.

(வி - ம்.) அயுதம் - பதினாயிரம். தெறித்து - விடுத்து. கதிர்மாற்றலன் - பானுகோபன்.

(241)