பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்733

(இ - ள்.) இங்ஙனம் வியப்புற்ற பானுகோபன் இத்தன்மையான வில்வீரனைக் கணைகளாற் கோறல் அருமையாகு மென்று எல்லா உலகிற்கும் அன்னையாகிய உமையம்மையார் ஒரு பாகத்தே தங்கும் இறைவன் தந்த மோகனக் கணையைச் செலுத்த வெற்றியினையுடைய வீரவாகு அம் மோகனக்கணை வருதலைப் பார்த்துப் பொருந்தும் இக்கணையால் நமக்கு அறிவுளதாகு மென்று வாளாநின்றனன்.

(வி - ம்.) நமது தந்தையாகிய இறைவன் கணையாதலின் நமக்கு அறிவினையே தரும். மோகந்தரா தெனத் துணிவு கொண்டு நின்றானென்பார். துன்னுபடை யாலறிவு தோன்றுமென நின்றார் என்றார்.

(251)

 தந்தைபடை யாயினுந்த வத்தினுறல் பெற்றோர்
 சிந்தையினி னைந்தபடி செய்திடுவ தன்றே
 அந்திலுயர் வீரன்முத லோரறிவு மாய்த்து
 மைந்தினொடு நிற்பவது கண்டுமகிழ் தீயோன்.

(இ - ள்.) தனது தந்தையாகிய இறைவன் படையேயாயினும் அரிய தவத்தினைச் செய்து, அத்தவப்பயனால் அப்படையினை அடையப் பெற்றவர்கள் தங்கள் மனத்தின்கண் ணினைத்த வண்ணம் செய்து விடுவதல்லவா? ஆதலால் அப்படை அவ்விடத்துள்ள உயர்ந்த வீரவாகு முதலியோர் அறிவினை மறைத்து வலியோடு நிற்க. அதனைக் கண்ணுற்று உவப்பெய்திய தீயோனாகிய பானுகோபன்.

(வி - ம்.) தந்தை - சிவன். அந்தில் - அவ்விடத்தே. மைந்து - வலிமை.

(252)

 வென்றிநம தென்றுவில்வ ளைத்தனிக மீது
 துன்றுசரம் விட்டுடறு ளைத்தல்வினை மிக்கான்
 அன்றைவிளை வோர்ந்துகுக னாடலய ரமோகம்
 ஒன்றுபடை யூக்கினனு டைந்ததஃ தன்றே.

(இ - ள்.) வெற்றி நம் பக்கலேயா மென்று வில்லினை வளைத்துப் படையின்மீது செறிந்த கணைகளைச் செலுத்தி உடல்களைத் துளைத்தலாகிய தொழிலின் கண்ணே மிக்கான். அன்றைப் பொழுதின்கண் விளைவினை யாராய்ந்து குகன் வெற்றியைத் தருகின்ற ஞானம் பொருந்திய கணையினைச் செலுத்தினன். அம்மோகனக் கணை அப்பொழுதே தோற்றோடிய தென்க.

(வி - ம்.) மோகனக்கணை - மயக்கத்தையுளவாக்கும் கணை. அமோகக் கணை - அறிவை யுளவாக்குங் கணை.

(253)

 இரித்தபடை மீண்டுகுக னெந்தையை யடுத்த
 துருத்துவிறல் வாகுவிவ னுள்ளுயிரை யின்னே
 பிரிப்பலென முக்கணுடை யான்படைபி டித்தான்
 தெரித்தவுணன் வானிடைம றைந்துநகர் சென்றான்.