பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்735

வெண்கதிர்க் கடவுளைச் சுற்றிய ஊர்கோள் போர்க்களத்தின் மதிலாகப் பெருமை பொருந்திய அவ்வெண்கதிர்க் கடவுள் அமர்க்களத்தின் நடுவண் மிகுந்த இருளைக் கெடுக்க ஒளியுண்டாக வைத்த வெள்ளிய விளக்கமாகும். வெண்கதிர்க் கடவுளின் பக்கலிலுள்ள விண்மீன்கள் படைகளின் ஒளியாகப் பகைவர்கள் செறிந்த உயர்ந்த போர்க்களம் அகன்ற வானினை யொத்த தென்க.

(வி - ம்.) புலம் வானத்தை யொக்குமென முடிக்க. பற்றலர் முதலியன புலத்திற் கடை. விழைதல் - ஒத்தல்.

(257)

வேறு

 அரும்பிய மாலையி லடுத்த வீரனும்
 பொருந்திறன் முருகனைப் போற்றி யேவலால்
 இருந்தனன் றனதிடத் தெவருஞ் சென்றுதம்
 திருந்திய விடங்களிற் சிவணி வைகினார்.

(இ - ள்.) இங்ஙனம் தோன்றிய மாலைப்பொழுதின்கண் பாடி வீட்டையண்மிய வீரவாகுவும் போர்க்குரிய வலியினை இயல்பாகவுடைய முருகனைத் துதித்து அவன் கட்டளையின்வண்ணம் தனது கட்டூர்க்கட் சென்று தங்கினான். ஏனைய வீரர் யாவரும் விடைகொடு சென்று தங்களுக்காகத் திருத்தமுறச் செய்த கட்டூர்க்கட் பொருந்தி வைகினார் என்க.

(வி - ம்.) வீரன் - வீரவாகு. சிவணி - பொருந்தி.

(258)

 தொன்றறி யாததோர் தோல்வித் தீஞ்சுவை
 நன்றுகைப் படுத்தவந் நாம வேலினான்
 தன்றனி யுவளகஞ் சார்ந்து மத்தரின்
 கன்றிய கவலையங் கடலிற் றாழ்ந்தனன்.

(இ - ள்.) இதன் முன்னர் நிகழ்ந்த போரின்கண் அறியாததாகிய தோல்வியாகிய இனிய சுவையினைப் பெரிதுந் தன்கைப்படுத்திய அச்சந்தரும் வேற்படை யுடையனாகிய பானுகோபன் தனது ஒப்பற்ற அந்தப் புரத்தை அணுகி உன்மத்தரைப்போல அடிப்பட்ட கவலையாகிய கடலின் கண்ணே மூழ்கினானென்க.

(வி - ம்.) இவன் சென்ற போர்தொறும் வென்றியே புனைவதன்றித் தோல்வி யென்பதைக் கனவிலுங் கண்டறியாத வீரனென்பார், "தொன்றறியாததோர் தோல்வித் தீஞ்சுவை - நன்றுகைப்படுத்த வந்நாம வேலினான்" என்றார். உவளகம் - அந்தப்புரம். இதனை, "அவளையேயமு தாகவவ் வண்ணலும், உவள கந்தன தாக வொடுங்கினான்" என்னுஞ் சிந்தாமணி யடியானு முரையானு முணர்க.

(259)

 மதலைதன் மனத்தொடு வராமை தேர்தலும்
 கதமிகச் சூர்மகன் கனன்று நாளையான்
 விதலையுற் றனைவரும் விளிய முக்கணன்
 புதல்வனை வேறெனப் புழுங்கி வைகினான்.