பக்கம் எண் :

76தணிகைப் புராணம்

 தாழை பூவொடு ததைந்த முன்னெலாம்
 ஞாழல் வீத்திர ணன்று குப்பன
 வாழி வாளொடு வளைந்த கள்வர்முன்
 வீழ ணித்தொகை வீசு வாரென.

(இ - ள்.) வாளாயுதத்தோடு (தம்மெதிர்வந்த) கள்வருக்கெதிரே தாங்கள் விரும்பி யணிந்திருந்த அணிகலன்களின் தொகுதியினை வீசுகின்றவர்களைப் போலத் தாழைமரங்கள் பூக்களோடு நெருங்கியுள்ள முன்னிடங்களில் நெய்தனிலக் கருப்பொருளாகிய ஞாழலென்னுமொருவகை மரம் நன்றாகப் பூத்திரளைச் சொரிவன.

(வி - ம்.) தாழை பூவோடு நிற்றல் வாளொடு நிற்கும் கள்வருக்கும் ஞாழன்மரம் பூவைச் சொரிதல் அணிசிந்துவாருக்கும் உவமையாகக் கொள்க. ஞாழல் - நெய்தனிலத்துக்குரிய ஒருவகை மரம். இதன் பூ பொன்னிறமாக இருக்கும். குங்கும மரமென்பாரும் உளர். வாழி - அசை; வீழ் - விரும்புகின்ற. அணித்தொகை - அணிகலன்களின் கூட்டம்.

(141)

 கலவி னார்பழி கரக்கு மேதைபோற்
 குலவு நாகமுங் கொங்கு ஞாழலும்
 நிலவு கைதையு நெய்த லுங்கடற்
 புலவ றக்கடி போர்ப்ப வெங்கணும்.

(இ - ள்.) தம்மொடு கலந்தவர் பழிச்சொற்களை மறைக்கும் அறிவுடையாரைப்போல விளங்குகின்ற புன்னைமரங்களும், வாசனையோடு கூடிய ஞாழன் மரமும், பொருந்திய தாழை மரங்களும், நெய்தற்கொடிகளுமாகிய இவைகள் பூவைச் சொரிந்து கடலிலுளவாகிய புலால்நாற்றம் நீங்க எவ்விடத்தும் வாசனையால் மூடுவன.

(வி - ம்.) கலவினார் - கலந்தவர்; நட்புக்கொண்டவர். கடி - வாசனை. போர்ப்ப - மூடுவன. புலவு - புலால் நாற்றம்.

(142)

 இழிவு ளாருளு மேற்ப வர்க்கெலாம்
 அழிவி லாவர மருளு வாருளர்
 கழிபு லாற்கருங் கடல கன்றுறை
 முழுகு வோரைவான் முன்னு விக்குமே.

(இ - ள்.) இறைமைக் குணமின்றி இழிவுள்ளனவாகிய (செத்துப் பிறக்கின்ற புன்சிறு) தெய்வங்களுள்ளும் தம்மைத் தலைவனாகக் கருதி வந்து இரப்பவர் எல்லாருக்கும் கெடாத வரத்தினை அளித்தல்செய்வாரும் உளர். அதுபோல மிக்க புலால் நாற்றத்தையுடைய கரிய கடலானது, தனது பெரிய துறைக்கண்ணே (அர்த்தோதயம் மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில்வந்து) நீராடுபவரை விண்ணுலகத்திற் சேர்க்கும்.

(வி - ம்.) இழிவுளார் - செத்துப் பிறக்கின்ற புன்சிறு தெய்வங்கள். முன்னுவித்தல் - சேர்த்தல்.

(143)