பக்கம் எண் :

78தணிகைப் புராணம்

கிய காரியத்திற்குத்தான் காரணமாயிருத்தலின் அவ்வாகாய குணமாகிய சத்தத்தை முன்னும், வாயுகுணமாகிய பரிசத்தை அதன்பின்னும் வாயுவானது தேயுவாகிய காரியத்திற்குத்தான் காரணமாயிருத்தலின் அவ்வாயுகுணமாகிய பரிச காரணத்தைத் தேயுகுணமாகிய ரூபகாரியத்தின் முன்னும், ரூபகுணமாகிய காரியத்தை அதன் பின்னும் தேயுவானது அப்புவாகிய காரியத்திற்குத்தான் காரணமாயிருத்தலின் அத்தேயுகுணமாகிய ரூபகாரணத்தை அப்புகுணமாகிய இரசகாரியத்தின் முன்னும் இரசகுணமாகிய காரியத்தை அதன்பின்னும் அப்புவானது பிருதிவியாகிய காரியத்திற்குத்தான் காரணமாயிருத்தலின் அவ்வப்பு குணமாகிய இரசகாரணத்தைப் பிருதிவிகுணமாகிய கந்தகாரியத்திற்கு முன்னும் கந்தகாரியத்தை அதன்பின்னும் ஒடுக்கமுறையாக முறைப்படவைத்து சப்தபரிசரூபரசகந்தங்களென ஆன்றோர்கள் எண்ணுவாராயினர். இங்ஙனம் கூடிய ஐங்குணங்களில் இரசகந்த குணங்களிரண்டினைக்காட்டிலும் ரூபகுணமுற்பட்டும் அவ்ரூபகுணத்திற்கு இரசகுணம் பிற்பட்டும் கந்தகுணம் இவ்விரசகுணத்திற்குப் பிற்பட்டும் நிற்றலால் ரூபரசகந்த மென முறைப்பட்டு நிற்கற்பாலவை, மீன்குலங்களிடத்து முட்டைகளையீன்று அம்முட்டைகளை மோந்தறியும் கந்தகுணம் முற்பட்டும், கங்குடித்தலும் இனத்தினை வாய்மடுத்தலும் ஆகிய இரசகுணம் முட்டைகளையீன்று மோந்தறிந்தபின் நிகழ்வதாகலின் அதனிற்பிற்பட்டும் அவ்விரசகுணம் நிகழ்ந்தபின்னரே முட்டைகளை நோக்கினால் கண்டுவக்கும் உருவகுணம் நிகழ்வதாகலின் அதனிற்பிற்பட்டும் நிற்றல் காண்க. இம்முறைக்கியைய கந்தரசரூபமென முறைப்பட்டுத் தலைகீழாம் மாறி நிற்குந்தன்மை மீன்குலங்களின்மாட்டுக் காணக்கிடத்தலின் "மீன்குலம், உருவமாதிகள் உறழ்வ காட்டுமே" என்றார்.

இனி, மீன்குலங்களிடத்தமைந்திருக்கும் இங்ஙனமாய ரூபரசகந்தங்கள் ஏனையுயிர்கள்மாட்டின்றி இம்மீன்குலங்களிடத்திலேயே அமையப்பெற்று அவ்வுயிர்களினும் வேறுபட்டிருக்குந் தன்மையுடையனவாகையால் "மீன்குலம் உருவமாதிகள் உறழ்வ காட்டுமே" என்றா ரெனினு மமையும்.

தாமீன்ற முட்டைகள் ஏனைய மீன்களீன்ற முட்டைகளோடு கலக்க அவற்றுள் தம்முடையன இன்னவையென மோந்தறியும், கந்தகுணமும், தாம் வசித்தற்கிடமாகிய நீரையே குடித்து இனத்தையும் உண்ணும் இரசகுணமும், முட்டைகள் வெடித்துக் குஞ்சுகளுண்டா யுய் வதற்குக் காரணமாகப் பார்க்கும் ரூபகுணமும் மீன்குலங்களுக்கேயன்றி ஏனைய உயிர்கள் மாட்டு அமையாதிருத்தல் ஈண்டு
நோக்கத்தக்கது.

(145)

 இப்பி வாலிடம் புரிவ லம்புரி
 தப்ப ருஞ்சலஞ் சலங்கள் பன்முறை
 பப்பின் முற்றிய பாஞ்ச சன்னியம்
 எப்ப ரிசனத் திறைவ னொக்குமே.

(இ - ள்.) இப்பியும், வெள்ளிய இடம்புரிச் சங்கமும், வலம்புரிச் சங்கமும், நீங்குதற்கரிய சலஞ்சலங்களும் தன்னைச் சுற்றிப் பலமுறையாகப் பரத்தலால் வளைதலைத் தன்னிடத்துக்கொண்ட பாஞ்சசந்நியமானது எவ்வகையான பரிசனங்களையுமுடைய அரசனை ஒக்கும்.