பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்801

 மாற்றி னாரவ்வப் படைகளின் மறுப்பதுண் மையினால
 ஏற்ற மின்றென விறைபடை தொடுத்தில னவுணன்.

(இ - ள்.) பகைவர்கள் விடும் அவ்வப் படைகளை அவ்வப் படைகளை விடுத்து மறுத்தலுளதாகையான் அவ்விருவரும் வெவ்விய காற்றின் படையும், அழற்படையும், வெங்கதிர்க் கடவுள் படையும், தேனையூற்றுகின்ற மணத்தினையுடைய மலரின் கண்ணுள்ள பிரமன் படையும் விண்டுவின் படையுமாகிய இவைகளைச் செலுத்தி நீக்கினார். அவுணனாகிய பானுகோபன் உயர்வின்றென்று இறைவன் படைக்கலத்தினைத் தொடுத்தில னென்க.

          (வி - ம்.) இப்பானுகோபன் முன்பொருமுறை வாகுப்பெயரோன் மேல் இறைவன் படையைச் செலுத்த அப்படை அவனை இறுதிசெய்யாமை கண்டறிந்துளனாதலால் "ஏற்றமின்றென இறைபடை தொடுத்திலன்" என்றார். இனி, அவ்வப்படையான் அவ்வப்படையை மாற்றுதலுளதாகையான் உயர்வின்றென்று இறைவன் படை தொட்டிலனெனினுமாம். தேம் - வாசனை.

(436)

 மாயை யால்வெல்ல மதித்துவிண் மறைந்துவெஞ் சரங்கள்
 தூய வீரன்மேற் றொடுத்தனன் சேதனப் படையைத்
 தீயன் மேலவன் விடுத்தனன் றீர்ந்தது மாயை
 காய நின்றனன் றேரொடுங் கரந்தவக் கள்வன்.

(இ - ள்.) பானுகோபன் மாயையில் வெல்லக் கருதி வானின் கண் மறைந்து கொடிய கணைகளைத் தூய்மையுடைய வீரவாகுமீது தொட்டனன். அவ்வீரவாகு அறிவுருவாகிய படையைத் தீயவனாகிய பானுகோபன்மீது விட்டனன். மாயை நீங்கியது. தேரினொடு மறைந்த அக் கள்வனாகிய பானுகோபன் விண்ணின்கண் ணின்றனனென்க.

          (வி - ம்.) காயம் - ஆகாயம். சேதனம் - அறிவு. தீயன் - பானுகோபன்.

(437)

 விடுவ லோவினி நினையென வெகுண்டுவிண் ணெழுந்து
 தொடுச ரங்கண்மே னிரைத்தனன் றூயவ னவனும்
 விடுச ரங்கண்மே னிரைத்தனன் விலக்கினர் திரிந்தார்
 கடுவி சைக்கொடு சூறையின் மாதிரங் ககனம்.

(இ - ள்.) வாகுப் பெயரமலன் இனி நின்னை உயிருடன் விட்டு விடுவனோ வென்றுகூறிச் சினந்து வானின்கண் ணெழுந்து தொடுக்கத் தக்க கணைகளை நிரைத்தனன். அப்பானுகோபனும் விடத்தக்க கணைகளை அவ்வமலன்மே னிரைத்தனன். மிக்க வேகத்தினாற் சூறைக் காற்றைப் போல இருவரும் திசையின்கண்ணும் வானின்கண்ணும் சுற்றித் திரிந்தனரென்க.

(வி - ம்.) விடுவலோ - வினா : எதிர்மறை. தொடுசரம் - வினைத்தொகை. விலக்கினர் - முற்றெச்சம். சூறை - சுழற்காற்று. ககனம் - வானம்.

(438)