பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்803

 வாணி கேள்வன்மு னருளிய வேலினை வல்லே
 ஏணி லாதவன் விடுத்தன னெய்கணை துமித்துத்
 தூணி லாவிய தோளெதி ரடுத்தலுந் தோன்றல்
 கோணை நாந்தக முரீஇயிரு துணிபடக் குறைத்தான்.

(இ - ள்.) பெருமையிலனாகிய பானுகோபன் வாணிதேவியின் நாயகனாகிய பிரமன் முன்னர்த் தனக்கருளிய வேற்படையினை விரைவாக விடுத்தனன். அவ்வேற்படை வீரவாகு எய்கின்ற கணைகளைக் கெடுத்துத் தூணினை யொத்த தோளினெதிரே யடுத்தபொழுது வீரவாகு பகைவரான் அழிதலில்லாத வாளினை யுருவி இருதுண்டாம் வண்ணம் வெட்டினானென்க.

(வி - ம்.) ஏண் - பெருமை. கோணை - அழியாமை.

(442)

 நாந்த கங்கர முரீஇயெதிர் நடந்துபோய் நம்பி
 சேந்த கைத்தலச் சிலைதுணித் தெழுந்துவா டிரித்துக்
 காந்து கண்ணினன் பெயர்ந்தனன் கடுகவா ளுருவி
 ஏந்த லெந்தினிப் போவதென் றெதிர்த்தன னமர்த்தார்.

(இ - ள்.) வாளினைக் கையானுருவி எதிராக நடந்து சென்று குணநிறைவினனாகிய வாகுவினது செந்நிறம் பொருந்திய கையின்கண் ணுள்ள வில்லினை வெட்டி, மேலெழுந்து வாளினைச்சுற்றி அழல்கின்ற கண்ணினையுடைய பானுகோபன் சென்றனன். தலைவனாகிய வீரவாகு விரைவாக வாளினையுருவி இனிப் போவதெங்கேயென்று எதிர்த்தனன். இருவரும் போரினைச் செய்தனர்.

(வி - ம்.) எந்து - தெலுங்கச்சொல்; இஃது ஈண்டு எவ்விடமென்னும் பொருட்டு.

(443)

 சாரி கைத்தொழில் புரிந்தனர் தாளினைக் குறிப்பார்
 வாரி ருங்கர நோக்குவர் மணிமுடி மதிப்பார்
 வீர வாளெறி விலக்குவ ராகிய வேலைத்
 தாரை வாளினை வீரன்றோள் சார்த்தின னவுணன்.

(இ - ள்.) இருவருஞ் சுற்றுந் தொழிலினைச் செய்தனர்; இருதாள்களை இலக்காகக் கருதுவார்கள்; நீண்ட பெரிய கைகளை வெட்டுதல் செய்யப்பார்ப்பார்கள். அழகியதலையினை வெட்டுதல் செய்ய வெண்ணுவார்கள். வீரத்தால் வாள்வெட்டினை விலக்குவாராகிய காலத்து மாலையினையணிந்த அழகிய வாட்படையை வீரவாகுவின் தோளின்கண் பானுகோபன் பொருந்தச் செய்தனனென்க.

(வி - ம்.) தாரைவாள் - மாலையினையணிந்த அழகியவாள். இதனை "வீரவே றாரைவேல்" என்னுந் திருமுருகாற்றுப் படையின் கண்ணுள்ள தனிப்பாடலானறிக. இனித் தாரை ஒழுங்கெனப் பொருள் கொண்டு "தாரைகண் மழை நேரோடல்" என்னும் நிகண்டினைக் காட்டு வாருமுளர்.

(444)