பக்கம் எண் :

804தணிகைப் புராணம்

 எறிந்த நாந்தகம் வாங்குமு னெரியெனக் கொதித்துச்
 சிறந்த வீரியன் றானவன் றோளுகச் செகுத்தான்
 பிறந்த சீற்றமோ டொருகையி னாந்தகம் பெயர்த்து
 மறிந்தெ திர்ந்தனன் மாற்றினன் மற்றிடக் கரமும்.
c

(இ - ள்.) வெட்டியவாளை வாங்குவதற்கு முன்னர் அழலெனக் கொதிப்புற்றுச் சிறப்புற்ற வீரத்தினையுடைய வீரவாகு பானுகோபன் தேர்விழும் வண்ணம் வெட்டினான். அஞ்ஞான்றுளவாகிய சினத்துடன் மற்றொரு கையான் வாளினை எடுத்து மடக்கி வெட்டினான். அங்ஙன மெறிந்த மற்றைய இடக்கரத்தினையும்
வெட்டினனென்க.

(445)

 மாயை வன்படை தொடுக்கிய தானவன் மதித்தான்
 ஆய சிந்தையுஞ் சென்னியு மமரர்க டுயரும்
 மேய சூரனெக் கழுத்தமும் விரதியர் குறையும்
 பாய பார்மக ளிடும்பையு மொருங்குகப் படுத்தான்.

(இ - ள்.) இருகையு மற்றபொழுது பானுகோபன் வலிய மாயைப்படையினைத் தொடுக்கக் கருதினான். அங்ஙனங் கருதுதலுளதாகிய மனத்தினையும், தலையினையும், தேவர்கடுன்பினையும், ஆயிரத் தெட்டண்டங்களுக்குந் தலைவனாகப் பொருந்திய சூரனிறுமாப்பும் விரதத்தினையுடைய தாபதப் பக்கத்தாரின் றுயரும் பரந்த நிலமகடுன்பும் ஒருசேர நீங்கக் கொன்றனனென்க.

(வி - ம்.) தொடுக்கிய - தொடுக்க. எக்கழுத்தம் - இறுமாப்பு. பாய - பரந்த. இடும்பை - துன்பம்.

(446)

 அமரர் கற்பக மலர்பொழிந் தாடவாங் கலையின்
 குமரி யாடமெய்க் குறைபல கோடிநின் றாடும்
 சமர்செய் ஞாட்பிடைத் தழங்கிவீ ரர்களொடுந் தேரின்
 விமல னாடினன் வியனிலம் வியத்தகுங் குரவை.

(இ - ள்.) தேவர்கள் கற்பகமரத்தின் மலர்களைச் சொரிந்தாட, வாவிச்செல்லுகின்ற கலைமானை வாகனமாகக்கொண்ட துர்க்கையாட, பலகோடி மெய்கள் நின்றாடுகின்ற பறந்தலையின்கண் முழங்கி வீரர்களோடு தேரின்கணின்று யாவரும் வியக்கத்தக்க குரவைக்கூத்தினை மல மற்றவனாகிய வாகுப் பெயரோனு மாடினானென்க.

(வி - ம்.) வாங்கலை - வினைத்தொகை. மெய்க்குறை - குறைப் பிணம். இப்பாட்டு திணை : தும்பை. துறை - முன்றேர்க்குரவை. ஞாட்பு - போர்க்களம். விமலன் - வீரவாகு.

(447)

 வீழ்ந்த வீரனைப் பூதர்க ணெருங்கினர் விமலை
 வாழ்ந்த தாழ்கர நோக்கினர் மருட்கையின் வியந்தார்
 போழ்ந்த வாள்கரம் வீசியா டினர்சமர் புகழ்ந்தார்
 ஆழ்ந்த வேழ்கட லுடைந்தென வார்த்தன ரம்மா.