பக்கம் எண் :

808தணிகைப் புராணம்

கணைகள் பாய்தலான் மரப்பொந்தினையொத்த நெஞ்சினையுங் கண்ணுற்று இதனையெண்ணெயிலிட்டுக் காமின்கோள் எனக் கரைந்தன னென்க.

(வி - ம்.) சோராது - எஞ்சாது. குமரன் - மகன். இனைந்து - வருந்தி.

(457)

 ஆறாப் பெருந்துயர மாறிச் சினம்வீறி
 மாறாக வந்தார் வளமுழுது மோரிமைப்பில்
 பாறாடு வெங்களத்தின் றெம்பியாற் பார்வியப்ப
 நீறாக்கு வேனென்று விட்டா னெடுந்தூது.

(இ - ள்.) சூரன் ஒருகாலத்துந் தணியாத மிக்கதுயரந் தணிந்து சினம்விஞ்சி எனக்குப் பகையாகவந்தவர் செல்வமுழுது மோரிமைப் போழ்தத்துப் பருந்தினங்கள் பொருந்துகின்ற பறந்தலையின்கண் இன்று என்றம்பியாகிய சிங்கமுகனால் இந்நிலவுலகம் வியப்பினையடையப் பூழி யாக்குவேனென்று சொல்லிப் பெரிய தூதுவரை அவன்பா லேவின னென்க.

(வி - ம்.) வீறி - மிக்கு. வளம் - செல்வம். பாறு - பருந்து. எம்பி - சிங்கமுகன். பார் - ஆகுபெயர்.

(458)

 கேட்டா னரிமுகத்தோன் கிட்டியதூ தாற்கேடு
 வாட்டா முகமு மனமு நனிவாட்டிக்
 கோட்டானை வாட்டானைக் கொய்யுளைமாப் பன்மணித்தேர்ச்
 சேட்டா ரிலக்கவெள்ளச் சேனை யொடுமடுத்தான்.

(இ - ள்.) சூரன் பானின்றும்போந்த ஒற்றர்களால் ஆண்டு நிகழ்ச்சியுற்ற கேட்டினைக்கேட்டுப் பகைவரா னொருகாலத்தும் வாட்டஞ்செய்ய வொண்ணாத முகத்தினையும், மனத்தினையும்வருத்தி மருப்பினையுடைய யானையும், வாளினையுடைய தானையும், கொய்து கட்டிய தலையாட்டமைந்த பிடரிமயிரினையுமுடைய பரிகளும், பலமணிகள் பதித்ததேரும், பெருமைபொருந்திய இலக்கவெள்ளஞ் சேனையுமாகிய இவற்றினோடு பொருந்தினனென்க.

(வி - ம்.) வாட்டா - ஈறுகெட்டபெயரெச்சம். நனி - மிகவும். வாள் + தானை =வாட்டானை என்க. சேடு - பெருமை.

(459)

 பூமகட்குத் தன்னகரும் பொன்னகரந் தவ்வைக்கு
 மாமுறைமுன் வைத்த வடைவிற் பிறழ்வித்த
 கோமகனைத் தாழ்ந்தான் குறையுரைப்பக் கேட்டினைந்தான்
 ஈமணந்துய் யுங்கொ லெரிசிறிய தென்றென்றான்.

(இ - ள்.) மலர்மகட்குத் தன்னகரமும், பொன்னுலகமும் அவள் தமக்கைக்கு மாகுமுறைமையை முன்னரமைத்த அடைவினின்றும் பிறழச்செய்த கோமகனாகிய சூரனைவணங்கினான். அவன்குறைபாட்டினைச் சொல்லக்கேட்டு வருந்தினான். எரிசிறியதென்றுகருதி ஈயானது அவ்வெரியைப் பொருந்தின் இறவாது பிழைக்குமோ வென்றானென்க.