பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்809

(வி - ம்.) தேவர்கள்பா லியற்கையி்ன் நிலைபெற்ற திருவினைத் தனக்காக்கி அத்தேவர்க்கு வறுமையினை முன்னர் அளித்த சூரன் இஞ்ஞான்று முருகனோடு மாறுற்றுத் திருவிழந்து வறுமை எய்தற்பாலன் என்பார். "அடைவிற் பிறழ்வித்த கோமகன்" என்றார்.

(460)

 இகுதற் கியைந்த விறுமாப் புரையமிழ்தாய்
 மிகுதற் கியைந்தவுரை மெய்ம்மைவிட மாயிற்றே
 நகுதற் கிடமாய் நயந்தவிறன் மைந்தரும்போய்த்
 தகுதற் கமைந்த படைபலவுஞ் சாம்பினவே.

(இ - ள்.) அண்ணலே ! நீகேடடைதற்கேதுவாகப் பொருந்திய அறிவிலிகள் செம்மாந்துகூறிய பயனில்சொற்கள் அஞ்ஞான்றுனக் கமுதாக, யாவரினும் மேம்பாடடைதற்கேதுவாகப் பொருந்திய யான் கூறிய அறிவுரைகள் உண்மையாகப் பொருந்திய நஞ்சுபோலாயிற்றே என்செய்யலாம். இவையன்றியும் பகைவர்யாவரும் நம்மைக்கண்ணுற்று அவமதித்துச் சிரித்தற்குக் காரணமாக வீர முதலிய செயலினைக் கண்ணுற்று யாவரும் விரும்பத்தக்க மக்களுங்கெட்டுப் போர்க்குத் தகுதியென்று கண்ணுற்றோர் கூறுதற்குப் பொருந்திய படைகள்யாவுங் கெட்டனவன்றோ.

(வி - ம்.) இடுதல் - தாழ்தல்; கேடடைதல். மிகுதல் - மேம்பாடுறல். சாம்பின - அழிந்தன.

(461)

 பல்ல நினைந்தென் படைகொண் டிடங்கழிப்பல்
 வெல்ல வலனேல் விளங்கெ னுருக்காண்பை
 கல்லினுங் காண்ட லரிதாங் கடந்திலனேல்
 வல்லவ வென்று வலித்தான் விடைகொண்டான்.

(இ - ள்.) அண்ணலே ! இனிப்பலவாறாகச் சிந்தனைசெய்வதனாற் பயனொன்றுமில்லை ; படையொடு சென்று பகைவரை யணுகுவேன் இறைவன்றிருவருட் செயலான் போரின்கண் வெற்றியுறுவேனாயின் விளக்கமுறுகின்ற என்வடிவினை இனிக்காணக்கடவை. யான்பகைவரை வெல்ல வல்லமையிலேனாயின் என்னுருவினை (பீடும்பெயரும் வரைந்து வீரர்க்கு நாட்டுங்) கல்லினிடத்துங்காண்டற் கருமையாகும். வன்மையை யுடையவனே யென்றுகூறிப் போரினுக்கு விடைபெற்றன னென்க.

(வி - ம்.) கன்னடுதலாவது பட்டவீரன் பீடும்பெயரும் கல்லின் வரைந்து கோவில் எடுப்பித்து அவன் சுற்றத்தார் முதலியோர் வழிபாடு செய்தல். நமக்கு எல்லா முதன்மையும் செல்வமும் பிறவும் வழங்கிய இறைவன்றிருக் குமரனைப் பகையாகக்கருதிப் போர் தொடங்கினமையால் நல்வழியிலுள்ளார் யாவரும் பொன்றுதலிற் சிறிதும் ஐயமின்றாம். ஆதலால் நம் பீடும்பெயரும் வரைந்து கன்னாட்டற்கு ஒருவருமிலராகி இறப்பது சரதமாகலான் என்னை அண்ணலே "கல்லினுங் காண்டலரி தாகும்" என்று கூறினானென்க.

(462)

வேறு

 பாக்கிய மினியின் றென்னாப் பயில்பெரு மனையுட் புக்குப்
 போக்கியப் பொருள்க ளெல்லாம் பொலியக்கை தொட்டு மோடு