பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்811

காலம் சிறையின்கட்பட்டு) வருந்துகின்ற வானவர்கள் காலின்கண்ணுள்ள பாடகம்போன்ற தளையைத் தறித்துக் காலநீட்டியாது அருள் செய்யக் கடவை யென்றான்.

(வி - ம்.) மாடகம் - முறுக்காணி. திவவு - நரம்பு. பாடகம் - பெண்களணியும் ஒருவகைக் காலணி. இவ்வணி காலைவிடாது சூழ்ந்து விலங்குபோன்று கிடத்தலின் "பாடக நிகளஞ்சீத்து" என்றார். இதனை "பாடகம் போலச்சூழ்ந்த பழவினைப் பயத்தினானே" என்னும் சிந்தாமணிச் செய்யுளா னறிக. "நாமகள்இலம்.) பாணித்தல் - காலம் நீட்டித்தல். நிகளம் - தளை.

(465)

 தேரினைக் கொணர்தி ரென்று செம்மலா ரருளிச் செய்ய
 வீரரில் வீர னப்போர் வேண்டினன் விடைபெற் றேகப்
 பாரிட ரிலக்கர் வீரர் பலருமாங் குடங்கு சென்றார்
 போரடு களத்தை யுற்றார் புவனங்க ளேங்க வார்த்தார்.

(இ - ள்.) இங்ஙனம் நாரதமுனிவன் விண்ணப்பஞ் செய்ததனைத் திருச்செவி மடுத்துத் தலைவனாகிய முருகக்கடவுள் உழையரை நோக்கித் தேரினைக் கொண்டுவாருங்கோள் என்று திருவாய்மலர்ந்தருள, அஞ்ஞான்று வீரருள் வைத்து வீரனாகிய வீரவாகு என்பான், சிங்கமுகனோடு செய்யும் அப்போரினைத் தான் பொர விரும்பினனாகிய பிரியாவிடை பெற்றுச் செல்லப் பூதகணங்களும் இலக்க வீரரும் ஏனைய வீரர் பலரும் அவனோடு ஒருசேரச் சென்று போர்க்களத்தைப் பொருந்தினராகி உலகங்களெல்லாம் ஏக்கமடைய வீரமுழக்கஞ் செய்தனர்.

(வி - ம்.) செம்மல் - தலைவனாகிய முருகன்; உடங்கு - ஒருசேர. பாரிடர் - பூதர்.

(466)

 கைவகுத் திருவர் தாமுங் கலந்தனர் படைக ளுய்த்தார்
 ஐவகை முடியுங் குஞ்சி முடிகளு மற்று வீழ்ந்தார்
 மெய்வகை யுறுப்புத் தீர்ந்தார் வீரமும் வரமு மற்றார்
 உய்வகை யுறக்கங் கொண்டா ருலப்பில ரிருவர் மாட்டும்.

(இ - ள்.) இருபக்கலிலுமுள்ள படைத்தலைவர்கள் படையினைப் போர்க்குரிய நிலையில் அணிவகுத்து ஒருவரோடொருவர் கலப்புற்றுப் படைக்கலங்களைச் செலுத்தினர். அங்ஙனஞ் செலுத்திய வளவில் ஐவகையாகிய முடியுறுப்புக்களும், மயிர்முடியு மறுதலான் நிலத்தின்கண் வீழ்ந்தனர் சிலர். இருபக்கலிலுமுள்ள அளவில்லாத வீரர்கள் தங்களுடலின்கண் உள்ள பலவகைப்பட்ட உறுப்புக்கள் நீங்கப்பெற்றவராய் இயற்கையானமைந்த வீரத்தினையும், செயற்கையாற் பெற்ற வரத்தினையுமிழந்து பிழைக்கும் வகை யுறங்கிப்போதலைக் கொண்டாரென்க.

(வி - ம்.) முடியுறுப்பைந்தாவன தாமம், மகுடம், பதுமம், கிம்புரி, கோடரம் என்பனவாம். தங்களுக்கு உண்டியு முடையு முறையுளு முதவிப் பாதுகாத்த தந்தலைவர்கட்கு வென்றிதரும் பொருட்டு உயிர் பிழைத்திருத்தல் கருதாது உயிர்துறந்தன ரென்பார். "உய்வகை யுறக்கங் கொண்டார்" என்றார். உய்வகை யுறக்கங் கொண்டா ரெனவே - உய்யாதிறத்தலைக் கொண்டா