பக்கம் எண் :

824தணிகைப் புராணம்

(வி - ம்.) விசிகம் - அம்பு. சில்லி - தேருருள். மாறு - ஒப்பு. மணி - அழகு.

(496)

 அண்டர் பூத ரனைவோரு மங்கை யெறிந்தங் கசித்தார்த்தார்
 கண்டு மடங்கன் மாமுகத்தோன் கனன்று மாயா பாசத்தை
 மிண்டு மிவரைப் பிணித்துதய வெற்பிற் போதந் திருத்தியெனக்
 கொண்டு விடுத்தா னனைவரையுங் கொடுபோந் திருந்த தப்படையே.

(இ - ள்.) தேவர்கள் பூதர்கள்யாவரும் அழகியகைகளைத்தட்டி அவமதித்துச் சிரித்தனர். (இங்ஙனஞ் சிரித்ததனைக்) கண்ணுற்றுச் சிங்கமுகத்தோன் சீற்றங்கொண்டு வஞ்சனைசெய்யுங் கயிற்றைநெருங்கிய இவர்களைக்கட்டி உதயமலையின்கண்ணே சென்றிருப்பாயாகவென கைக்கொண்டு விடுத்தனன். அங்ஙனஞ் செலுத்திய அப்படை யாவரையுங் கொண்டுசென் றிருந்ததென்க.

(வி - ம்.) அண்டர் - தேவர். அசித்தல் - சிரித்தல், பரிகசித்தலுமாம். வஞ்சகக்கயிறு - மாயாபாசம்.

(497)

 சேந்தன் யாங்க ணுளனென்றே திரிந்தான் காணான் வெருண்டிரிந்து
 போந்தான் கொல்லோ வெனத்தூதர் பூத ரொடும்பா சறையிருந்தான்
 ஏந்தா லென்றா ரமர்க்கஞ்சி யிருந்தான் கொல்லோ வெனப்பதகன்
 காந்தா நின்றா னாங்கேகிக் கடப்பா மென்று பெயர்குற்றான்.

(இ - ள்.) முருகப்பெருமான் யாண்டுளனென்று தேடியலைதலைச் செய்துங்காணானாய் எனக்கஞ்சி ஓட்டெடுத்துச்சென்றானோ என்றுகூற, அவன் தூதுவர்கள் தலைவனே ! பூதப்படைகளுடன் பாடிவீட்டின்கண் ணிருந்தனன் எனக்கூறினர். பதகனாகிய சிங்கமுகன் போர்த்தொழில் செய்யவெருவி இருந்தனனோவென்றுகூறி அழற்சியுடையனாய் ஆண்டுச் சென்று அவனைவெல்வாமென்று பெயர்ந்தனனென்க.

(வி - ம்.) சேந்தன் - முருகன். கடத்தல் - வேறல்.

(498)

 காலி னிறைவன் கண்டனைத்துங் கரைய வறிதே நகைகொண்டு
 வேலி னிறைவன் றேரிவர்ந்து விண்ணோர் தத்தம் பணிபுரியக்
 கோல முரசக் குலங்குளிறக் கொடிவான் றுவன்றப் பூதர்படை
 ஆல மெனவெங் கணுமிடைய வடுத்தா னமர்செய் பறந்தலையில்.

(இ - ள்.) காற்றானாகியதேவன் இங்ஙனம் நிகழ்ந்தநிகழ்ச்சி யனைத்தினையுமறிந்து முருகன்பால் விண்ணப்பஞ்செய்யப் புன்சிரிப்புக் கொண்டு வேற்படையினையுடைய தலைவனாகியமுருகன் தேரின்மீதேறித் தேவர்கள் தத்தமக்குரிய தொண்டினைச்செய்ய, அழகிய வீரமுரசக் கூட்டங்கள்முழக்க, கொடிகள்வானின்கண்ணெருங்க, பூதர்களாகிய படைகள் நஞ்சென்று சொல்லும்வண்ணம் யாங்கணுநெருங்க அமரினைச் செய்யும் பரந்தவிடத்தினை அடுத்தனனென்க.

(வி - ம்.) கறைதல் - கூறல். கோலம் - அழகு. குளிறல் - ஒலித்தல். பறந்தலை - போர்க்களரி.

(499)