பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்825

வேறு

 கிட்டிய வவுணருங் கேடில் பூதரும்
 முட்டின ரதுக்கினர் முறையிற் பல்படை
 விட்டன ரழித்தனர் விரவி யாடினர்
 பட்டனர் பலரிரு திறத்தர் பாங்கினும்.

(இ - ள்.) தபூதப்படைகளும், ஒருவரோடொருவர் முட்டுதல் செய்தனர். (ஒருவரையொருவர்) அடித்தனர். முறையாகப் பலபடைக் கலங்களையும்விட்டு அழித்து ஒருவரோடொருவர்கலந்து போரினைச் செய்தார்கள். இருபகுதியினர்பக்கலினும் பலர் பட்டனரென்க.

(வி - ம்.) அதுக்கல் - அடித்தல். இதனைக் "கையான்வயிறதுக்குவா" ரென்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானறிக.

(500)

 கண்டன னரிமுகன் கணங்கொள் பூதரை
 உண்டலா லென்சின மொழிவ தின்றெனாக்
 கொண்டனன் பேருருக் குறுகி யாரையும்
 விண்டுவாய் மடுத்தகட் டிடுதன் மேயினான்.

(இ - ள்.) சிங்கமுகன் (இந்நிகழ்ச்சியினைக்) கண்ணுற்றுக்கூட்டத்தினைக் கொண்ட பூதர்களை உண்டாலல்லது என்சீற்றம் நீங்குவதில்லை யென்று பெரியவடிவினையெடுத்து அண்மி வாயினைத்திறந்து யாவரையுமுண்டு வயிற்றின்கண்ணிடுதலைச் செய்தன னென்க.

(வி - ம்.) எனா - என்று. பேருரு - விச்சுவரூபம். விண்டு - திறந்து. அகடு - வயிறு.

(501)

 மாயைவண் கயிற்றினாற் பாதி மாய்ந்ததும்
 ஆயிர வெள்ளமு மகட்டி னாக்கலும்
 போயொரு தூதுவன் புகலச் சூர்களி
 மேயின னொருவனை விளித்துக் கூறுவான்.

(இ - ள்.) வளம்பொருந்திய மாயையாகிய கயிற்றினாற் பாதிப் படைகள் கெட்டதனையும், ஆயிரம்வெள்ளம் படையினையும் வயிற்றின் கண்ணாக்கியதனையும் ஒருதூதுவன் சென்று செப்பச் சூரனானவன் களிப்பு மிகுந்தவனாகி ஒருவனையழைத்துச் சொல்லத் தொடங்கினான்.

(வி - ம்.) மாயைக்கயிறு - மாயாபாசம், சூர் - சூரன்.

(502)

 கந்தனேற் றிடும்படை காழ்ப்பி னின்றிடா
 அந்திலிங் குளபடை யனைத்து மேவென
 உந்தின னிளவல்போ ருஞற்ற னோக்கிய
 அந்தரத் துயர்ந்தவத் தாணி யேறினான்.