| | குன்ற மாயிரம் பெயர்த்துமேற் கொம்மென வுகைத்தான் | | | துன்று வாளியிற் சிதர்த்தவன் சிரங்கரந் துணித்தான். |
(இ - ள்.) அவுணனே! நீ நன்றே சொன்னாய்! உதோ நின் பின்னரே கூற்றுவனும் வந்துளன். இன்றே நின்னுயிர்க்கு இறுதியைச் செய்த நாளுமாகும் என்று கூறியவளவின், அதுபொறாத அவ்வவுணன் ஓராயிரம் மலைகளை (இரண்டாயிரங் கைகளானும்) பெயர்த்து விரைந்து எறிந்தனன். எம்பெருமான் தனது செறிந்த அம்புகளானே அம்மலைகளைத் துகள்படச் சிதறுவித்து மேலும் அவனுடைய தலைகளையும் கைகளையும் அறுத்து வீழ்த்தினன். (வி - ம்.) நன்றுகூறினை என்பது, இகழ்ச்சிக்குறிப்பு. ஊழ்நின்னு யிர்க்கிறுதியை இழைத்தநாள் இன்றேயாகும் என்றவாறு. கொம்மென - விரைவுக்குறிப்பு. (519) | | எட்ட னைத்தலைப் பெய்தநூற் றொருபதின் காறும் | | | விட்டு வாளிகள் சிரங்கரந் திருவிளை யாட்டால் | | | அட்ட னன்பரன் மதலைகாண் டொறுமஞ்சி விண்ணோர் | | | ஒட்ட லன்படு மாறெவ னெனவுல மந்தார். |
(இ - ள்.) இறைவன் திருமகன் விளையாட்டின் பொருட்டு இங்ஙனமே நூற்றுப்பதினெட்டுமுறை சிங்கமுகனுடைய தலைகளையும் கைகளையும் மீண்டுமீண்டும் கொய்து வீழ்த்தாநின்றனன். இந்நிகழ்ச்சியினைக் கண்ட தேவர்கள் தம்பகைவனாகிய அச்சிங்கமுகாசுரன் இங்ஙனமாயின் இனி இவன்சாகும் வழிதான் யாதுகொலோ? என்றையுற்று மனஞ்சுழன்றனர். (வி - ம்.) எட்டனைத் தலைப்பெய்த நூற்றொருபது - நூற்றுப்பதி னெட்டு. ஒட்டலன் - பகைவன். உலமரல் - சுழலுதல். (520) | | இன்ன வாறெம ராடுழி யிருகையோர் முடியும் | | | மன்ன மற்றன வறுத்தனன் மறுவலுங் கிளைப்ப | | | முன்னு மேல்வையி லுரப்பினன் முளைத்தில வகத்தோர்க் | | | கன்ன வாய்நுழை வான்கண்டு பிந்திய கடுப்பின். |
(இ - ள்.) இவ்வாறாகப் போர்நிகழுங்காலத்தே அவ்வவுணனுடைய தலைகளினும் கைகளினும் வைத்து ஒரோவொருதலையும் இரண்டு கைகளும் நிற்ப ஏனைய தலைகளையும் கைகளையும் அறுத்துத் தள்ளினன். அவை மீண்டும் முளைப்பத் தொடங்குழி தன்னைநினைப்போர் நெஞ்சத்தே அசபாமந்திரத்தின் வாயிலாய் நுழையும் எம்பெருமான் அந்நிலைமையினைக் கண்டு விரைந்து உங்காரஞ் செய்தருளினன், அவ்வளவில் அவை முளைத்தில. (வி - ம்.) அன்னம் - அசபாமந்திரம். இனிச் செவிவழியாகப் புகுவோன் எனினுமாம். (521) |