பக்கம் எண் :

834தணிகைப் புராணம்

 சிரமுந் திண்கையும் பொய்த்தலுந் திகழ்சமழ்ப் பினனாய்
 இருக ரத்தினால் வெல்வலென் றெடுத்தொரு கிரியை
 விரைய விட்டனன் வேலவ னொருகணை விடுத்துத்
 தரையி னாக்கின னவனொரு தண்டெடுத் துரைப்பான்.

(இ - ள்.) தலைகளும் திண்ணிய கைகளும் மீண்டும் வளராது பொய்த்துப் போயபின்னர், வெளிப்பட்டுவிளங்கும் நாணமுடையனாய். "இனி இம்முருகனை எஞ்சிய இந்த இரண்டு கைகளைக்கொண்டே வென் றொழிப்பேன்." என்னுமுட்கோளுடையனாய், ஒருமலையைப் பெயர்த்து விரைய வீசினன். அதுகண்ட இறைவன் ஒருகணையை ஏவி அம்மலையினைத் தடுத்து நிலத்திலே வீழ்த்தினன். அதுகண்ட அவுணன் தன் கையிலே ஒரு தண்டினை எடுத்துக்கொண்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவான்.

(வி - ம்.) சமழ்ப்பு - நாணம். அது மெய்ப்பாடாகிப் புறத்தார்க்குத் தோன்றவென்பார் திகழ்சமழ்ப்பு என்றார்.

(522)

 ஞாங்க ரேவவும் வாளிக ணடாவவு மன்றி
 ஈங்கு வேறொன்றும் பயின்றிலாய் போலுமென் றெடுத்த
 ஓங்கு தண்டமே லுகைத்தன னுமைமக னொருகைத்
 தாங்கு வச்சிரத் தண்டினை யெதிர்செல விடுத்தான்.

(இ - ள்.) "சிறுவனே ! நீ நின் கைவேற்படையினை ஏவவும், அம்புகளை எய்யவும் பயின்றதன்றி இப்போர்க்களத்திலே பிறிதோர் வித்தையும் கற்றாயிலைபோலும் என்றிகழ்ந்து அத்தண்டினை எம்பெருமான்மீது எறிந்தனன். அப்பொழுது இறைவியின்றிருமகன் தனதொரு கையின்கண் தாங்கியருளிய வச்சிரத் தண்டினை அத்தண்டின் எதிரே செல்லுமாறு ஏவியருளினன்.

(வி - ம்.) ஞாங்கர் - வேல். நடவா - செலுத்த. ஈங்கு - இப் போர்க்களத்தில். போலும் - ஒப்பில்போலி. உமை மகன் - முருகன்.

(523)

 எதிர்கொ டண்டினைப் பராகமாய் விழத்தள்ளி யேகி
 அதிர மார்புகீண் டந்தரக் கங்கைதோய்ந் தங்கை
 வதித லுற்றது வச்சிர மடங்கன்மா முகத்தோன்
 உதிர மூற்றெழ மறிந்துவீழ்ந் தாருயி ருலந்தான்.

(இ - ள்.) அவ்வச்சிரத்தண்டு தனக்கெதிரேவந்த அவ்வவுணன் தண்டினைத் துகளாகி நிலத்தில் வீழும்படி வீழ்த்துப் பின்னுஞ்சென்று உலகெலாம் அதிரும்படி அவ்வவுணனுடைய மார்பிற்றாக்கிக் கிழித்துப் பின்னர் வானகங்கையிலே சென்று நீராடி மீண்டுவந்து எம்பெருமானுடைய அழகிய கையிலே பொருந்தியது. அச்சிங்கமுகாசுரன் மார்பினின்றும் குருதியூற்றாகப் பொங்கும்படி மறிந்து வீழ்ந்து உயிர் நீத்தனன்.