பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்837

(வி - ம்.) இறைவன் - சிவபெருமான். இந்திரஞாலம் - விமானம். விறல் - வெற்றி. உழையவர் - பக்கத்துள்ள அமைச்சர்முதலியோருமாம். நுடங்க - அசைய.

(530)

 முந்து தூசிபோய்ப் பாசறை முற்றின கண்டு
 பைந்து ழாயினன் முதலியோர் பதைபதைத் தழிந்து
 வந்து ளானமர்க் கவுணர்கோ னென்றடி வணங்கக்
 கந்த வேணகைத் தெழுந்தனன் கடைத்தலைச் சென்றான்.

(இ - ள்.) அவுணனுடைய படைகளுள் வைத்து முற்படவந்த தூசிப்படை சென்று எம்பெருமானுடைய பாசறையினை வளைத்துக் கொண்டவற்றைப் பசிய துளசிமாலையணிந்த திருமான்முதலிய தேவர்கள் கண்டு நெஞ்சம் பதைத்து அழிந்து கந்தவேளின் திருமுன்னர்ச் சென்று திருவடிகளிலேவீழ்ந்து வணங்கி எம்பெருமானே ! சூரபதுமன் போரிடற்கு வந்துள்ளான் என்று விண்ணப்பிக்க அதுகேட்ட அப்பெருமான் நகைத்தருளி எழுந்து பாசறைவாயிலை எய்தினன்.

(வி - ம்.) துழாயினன் - திருமால். கடைத்தலை - வாயில்.

(531)

 மான தப்பெருந் தேரினை வளியிறை யுய்ப்ப
 வான துந்துமி முழங்கவா னவர்பணி புரிய
 ஞான நாயக னிவர்ந்தெதிர் நடந்தனன் மகவான்
 சேனை கண்டுள மழுங்கினன் மாயவன் றெளித்தான்.

(இ - ள்.) வாயிலை எய்தித்தனது மானதத்தேரின்கண் ஏறி அதனைக் காற்றுத்தேவன் செலுத்தாநிற்ப, தேவதுந்துமி முழங்கவும், தேவர்கள் குற்றேவல் செய்து சூழவும், ஞானநாயகனாகிய முருகப்பெருமான் ஊர்ந்து அவ்வவுணர்கோமான் முன்னர்ப் போயினன். அப்பொழுது தேவேந்திரன் அவ்வவுணனுடைய சேனைப் பெருக்கத்தைக்கண்டு மயங்கினன்; அவனைத் திருமால் தேற்றினன்.

ஞானநாயகன் - முருகன். மகவான் - இந்திரன். மாயவன் - திருமால்.

(532)

 சலந்த ரன்கயா சுரன்முத லானதா னவரின்
 வலந்த ழைத்தவர் மலிவுகாண் பூதர்நம் முடலம்
 நிலங்கி டக்குமல் லானிலை யாதென நினைந்தக்
 குலந்த ழைத்ததா னவரொடு மமர்த்தனர் குலைந்தார்

(இ - ள்.) சலந்தராசுரன் கயமுகாசுரன் முதலிய அசுரர்களிலேயும் ஆற்றன்மிக்க மறவருடைய மிகுதியைக்கண்ட பூதர்கள் இனி நம்முடல் இவராற்றுணிக்கப்பட்டுப் பிணமாய் நிலத்திலே கிடப்பதன்றி உயிரோடு நிலைபெறுவன ஆகமாட்டா என்று தம் நெஞ்சினுள்ளே நினைந்து, குலத்தானே பெருகிய அவ்வவுணப் படையோடு போர் தொடங்கிய மாத்திரையிற் குலைந்து போயினர்.