பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்843

 தங்கும கிழ்ச்சியி னார்த்தனர் கண்டுத ழன்றிவ ராருயிரை
 நுங்குவ லென்றவன் விண்ணிலெ ழுந்துநொ றிற்படை தூண்டினனே.

(இ - ள்.) அமரர் நந் தலைவனுடைய தேரின்கண் பெரியகொடி யாவாயாக என்று இரத்தலானே தீக்கடவுள் இருபக்கத்துஞ் சிறகுகளை யுடைய கோழிச் சேவலுருவங்கொண்டு மிகவும் ஆரவாரித்தனன். அக்கோழிக் கொடியின் கூக்குரன்முழக்கங்கேட்ட தேவரெல்லாம் தம் நெஞ்சத்தே தங்கிய மகிழ்ச்சியானே ஆரவாரித்தனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட சூரபதுமன் வெகுண்டு இவ்வெளிய தேவர்களின் அரிய உயிரை இப்பொழுதேகுடிப்பன் என்று கருதி வானத்திலே எழுந்து விரைவுடைய அம்புகளை ஏவினன்.

(வி - ம்.) புங்கவர் - தேவர். ஆதி - ஆகுதி. அங்கி - தீ. புறஞ் சிறை. வாரணம் - கோழிச்சேவல்; வெளிப்படை. தழன்று - வெகுண்டு. நொறில் - விரைவு.

(547)

 ஓலமி டும்புல வோர்தமை யஞ்சலி ரென்றொரு கையினமைத்
 தாலம்வி லக்கிய வண்ணலெ னக்கணை யாலவன் வாளியெலாம்
 சாலவ றுத்தனன் வேலிறை தானவர் தந்தலை வன்றிருமி
 மேலவ ரோடினர் பாலன்கொ லாஞ்சமர் மேவுவ னென்றழிவான்.

(இ - ள்.) அஞ்சி ஓலமிட்டழைக்கின்ற அமரரை, ஆறுமுகப் பெருமான் அருளோடுநோக்கி அஞ்சவேண்டா! அஞ்சவேண்டா ! அமைதிகொண்மின் ! என ஒருகைகவித்தமைத்த பின்னர் திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அகற்றி அமரரைப் பாதுகாத்தருளிய பரமசிவனைப்போன்று அம்புகளானே அச்சூரபதுமன் அம்புகள் அனைத்தையும் மாற்றியருளினன். அவ்வளவின் அவ்வவுணத்தலைவனாகிய சூரபதுமன் போர்செய்தற்கு மீளவுந்தொடங்க. அமரர்கள் இச்சிறுவனோ இவனோடு போர்த்தொழில் ஆற்றவல்லுநன் என்று ஐயுற்று அழிவாராய் ஓடா நின்றனர்.

(வி - ம்.) ஓலம் - அஞ்சினோர் துணைவேட்டழைக்குமொருசொல். ஆலம் - நஞ்சு. அண்ணல் - சிவன். திருமி - திரும என்க. திரும - மீள.

(548)

 கோன்மழை சிந்துபு தேர்சுழ லக்குறு குற்றனன் வேலவனும்
 பான்மையி னாலிர தந்திரி யப்பக ழித்திரள் சிந்தினனால்
 மீன்மறி யுங்கட றீவுவி லங்கல்வி யன்புவி விண்ணுமெலாம்
 நீன்முகின் மின்னின்வி ளங்கிம றைந்திடும் நெற்றிமி குந்தவர்தேர்.

(இ - ள்.) அச்சூரபதுமன் அம்புமழை பொழிந்து தன்தேர்சுழலச் செலுத்தி அணுகினன். வேற்படைவிமலனும், தன் தேரினையும் வானத்தே சுழலும்படி செலுத்தி நான்கு திசையினும் கணையைக்கூட்டங் கூட்டமாகச் செலுத்தினன். முன்னணிக்கண்ணராகிய அவ்விருவர் தேர்களும் மீன்கள்மிளிரும் கடலும் தீவும் மலையும் அகன்றநிலமும் வானமும் ஆகிய எவ்விடத்தும் நீலநிறமுடைய முகிலின்கட்டோன்றி மறைகின்ற மின்னல்போன்று தோன்றி மறைவனவாயின.