பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்845

அச் சூரபதுமன் நெடிய தோளின்மேல் மறமுடைய நெடிய ஆயிரங்கணைகளை எய்தனன். அவை அவன் தோளில்பட்டு மறைந்தன. அச்சூரபதுமனும் முருகவேள் நெடிய தோள்மேல் இரண்டாயிரம் கணைவிட்டான். அவை பெருமானுடைய தோளிற் பட்டதுணையானே நீறாகியொழிந்தன.

(வி - ம்.) ஆர - நிரம்ப. அண்ணல் - முருகன். வீடின - மறைந்தன. வேள் - முருகவேள். நீறின - நீறாயின.

(552)

 மருங்கமை பூதர்கள் வீரர்கண் மீதுவ டிக்கணை தானவர்கோன்
 முருங்கவு கைத்தனன் வேளவன் வில்லைமு ரித்தனன் மற்றொருவில்
 இருங்கையெ டுத்தும றைந்துறு மாயையி னிம்மென வானிடையுற்
 றொருங்கிய சிந்தையி னின்றன னுற்றம ராடின னும்பர்பிரான்.

(இ - ள்.) சூரபதுமன் பக்கத்தேநின்ற பூதர்கண்மிசையும் வீரர் மேலும் வடித்த அம்புகளை அவர் அழியுமாறு செலுத்தினன். அது கண்ட முருகவேள் அவ்வசுரனுடைய வில்லை முறித்தனன். அவ்வளவில் அவன் மற்றொருவில்லைத் தனதுபெரிய கையிலெடுத்துக்கொண்டு தனது மாயவித்தையாலே சடுதியில் வானத்தேசென்று போர்செய்தற்கு ஒரு பட்ட மனதோடு நின்றனன். தேவதேவன் அங்குஞ்சென்று அவனோடு போர்செய்தனன்.

(வி - ம்.) மருங்கு - சுற்றமுமாம். வடிக்கணை : வினைத்தொகை. முருங்க - அழிய. இம்மென : விரைவுக்குறிப்பு. உம்பர்பிரான் - முருகன்.

(553)

 ஓதநெ டுங்கடல் பாதல மாதிர மோங்கிய மேருமுடி
 மாதவன் வைப்பும றைந்தவ னேகநம் வள்ளலு மங்கணெலாம்
 போதல்பு ரிந்தம ராடின னவ்வபு லன்களி னீங்கியவன்
 மீதுய ரண்டக டாகமு கட்டினை மேவின னாங்கிறைபோய்.

(இ - ள்.) பெருக்குடைய நெடிய கடல்களிடத்தும் பாதாள லோகங்களினும் திசைகளிடத்தேயும் மேருமலையுச்சியினும் அம்மையப்பன் எழுந்தருளியிருக்கும் கைலாயமலையினும் சென்று சென்று மறைந்து அவ்வசுரன் நின்றனனாக, அவ்வவ்விடந்தோறும் நம்பெருமானுந் தொடர்ந்துபோய்ப் போர்செய்தனன். அவ்வசுரன் அவ்வவ்விடங்களை அகன்று அகன்றுபோய் அண்டகடாகமுகட்டினையும் எய்தினன் அங்கும் எம்பெருமான் சென்று.

(வி - ம்.) ஓதம் - கடற்பெருக்கு. மாதிரம் - திசை. மாதவன் வைப்பு - திருமாலுலகமுமாம். வள்ளல் - முருகன். புலன் - இடம்.

(554)

 மூதம ராடிவை யந்துக ளாக்கினன் மூர்க்கனி னைந்தணையும்
 மேதகு மிந்திர ஞாலமி வர்ந்துவெ குண்டம ராடல்செய்வான்
 வாய்தல டைத்துறு சேனைக ளப்புற மல்கிய நீர்தெரியாக்
 காதிநெ டுங்கணை யால்வழி கண்டுவிளித்தன னப்படையை.