பக்கம் எண் :

846தணிகைப் புராணம்

(இ - ள்.) பெரிய போரினைச் செய்து அவனுடைய தேரைத் துகள் படுத்தினன். அக்கொடியோனும், தான் நினைந்தமையாலே அங்கு வந்துற்ற மேன்மையான தகுதியையுடைய இந்திரவிமானத்தில் ஏறி அதனை ஊர்ந்து சினந்து போர்செய்தற் பொருட்டு அண்டகடாகத்திற்கு அப்பால் வாயிலை அடைத்துத் தங்கியுள்ள தன் படைகளின் மிகுதியை யுணர்ந்து அண்டகடாகத்தினை இடித்துத் தனது நெடிய கணையாலே வழியுண்டாக்கி அப்படைகளை அழைத்தனன்.

(வி - ம்.) வையம் - தேர். மூர்க்கன் - கொடியவன். நீர் - தன்மை. தெரியா - தெரிந்து.

(555)

 குடங்கரின் வேறுகு டங்கரி ரும்பொருள் கொட்டிய கொள்கையென
 இடங்கெட வல்லையி றுத்தன வெம்பெரு மானழ லின்விழியா
 உடங்குற நீற்றிம ழுப்படை நேமியொண் சூலமெ ழுக்கதையும்
 தடங்கைவி டுப்பவெ ழுந்தவை யெண்ணிலு ருக்கொடு சார்ந்தனவே.

(இ - ள்.) ஒரு குடத்தின்கண் மற்றோர் குடத்திலுள்ள பெரிய பொருள்களைக் கொட்டினாற்போன்று அப்புற அண்டத்தேயிருந்த படை இவ்வண்டம் இடமிலதாம்படி விரைந்து வந்துசேர்ந்தன. அதுகண்ட எம்பெருமான் அப்படைகளை நெருப்பெழவிழித்து ஒருசேர நீறுபடுத்தி யருளிப் பின்னர் மழு, சக்கரம் ஒள்ளியசூலம், எழு, தண்டு என்னும் இப்படைகளைத் தனது பெரிய கைகளினின்றும் ஏவாநிற்ப, அப்படைகள் ஒவ்வொன்றும் எண்ணிறந்த உருவமுடையனவாய்ச்
சென்றன.

(வி - ம்.) குடங்கர் - குடம். வல்லை - விரைந்து. உடங்குற - ஒரு சேர.

(556)

 ஏழ்தலை யிட்டவோ ராயிர வண்டமு மெய்திய வப்படைகள்
 ஊழ்தலை யற்றன ரேயென மங்கைய ருள்ளுயிர் கண்டழிய
 வாழ்தலை நீப்பவி ருந்தவ மாற்றமண் ணைத்திர ளோம்பவினம்
 வீழ்தலை யுற்றவ ரென்றல கைக்கண மோம்பவி ளித்திடுமால்.

(இ - ள்.) ஏழாயிர அண்டங்களினும் சென்ற எம்பெருமானுடைய அப்படைக்கலன்கள், தம்மைக் கண்டமாத்திரையிலே அசுரமகளிர் தங்கணவர் ஆகூழ் அற்றவராயினரே என்று ஏங்கி உள்ளம் அழியவும் உயிர் அழியவும் உயிரைவிடவும் பெரிய தாபத நிலையினை மேற்கொள்ளவும் பேய்க்கணங்கள் இறந்து வீழ்ந்தோர் தமக்கினமாயவர் என்று இரங்கி ஓம்பவும் அப்படைஞரைக் கொன்று குவித்தன.

(வி - ம்.) மங்கையர்கண்டு உள்ளமும் உயிரும் அழியவும், வாழ்தலை நீப்பவும், தவமாற்றவும், ஓம்பவும், விளித்திடும் (கொன்றிடும்) என்க. அலகை - பேய்.

(557)

 ஐயிரு நூற்றிரு நான்கெனு மண்டமு மாடுப றந்தலையாய்
 ஐயவி ருந்தன வென்னில வன்படை யார்தொகை காணவலார்
 ஐயிரு கையொடி ரண்டுகை பெற்றம ராடல்கு றித்துவரூஉம்
 ஐயன லாலவு ணர்க்கிறை யாருயிர் யாவர ழிக்கவலார்.