பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்847

(இ - ள்.) ஆயிரத்தெட்டு என்று கூறப்படுகின்ற அண்டமெல்லாம் போர் செய்யும் களமாகச் அச்சூரபதுமனுடைய படைகள் நிறைந்திருந்தன என்னில் அம்மம்ம! அப்படையின் தொகையை யாரே கணித்தற்கு வல்லுநராவர். அவ்வவுணரோடு போர்செய்து அவரை அழித்தற்குக் கருதிப் பன்னிரண்டு திருக்கைகளையுடையனாய்வந்த செவ்வேளையன்றிப் பிறர் யாரே சூரபதுமனுடைய அரிய உயிரையழித்தற்கு வல்லுநர் ஆவர்.

(வி - ம்.) பறந்தலை - போர்க்களம். ஐய - வியப்பு. ஐயன் - முருகப்பெருமான். அவுணர்க்கிறை - சூரபதுமன்.

(558)

 ஆங்கது கண்டவு ணர்க்கிறை யீசன ளித்தத ழற்றிகிரி
 ஏங்கவிண் ணோர்கள்வி டுத்தன னீட்டியி ருங்கையி னேற்றனன்வேள்
 ஓங்கிய சூரனு லப்பிலு ருக்கொடு ருத்தம ராடினனால்
 காங்கெயன் சேதன மாப்படை யாலவன் மாயைக ரந்தனனால்.

(இ - ள்.) பெருமானுடைய படைக்கலன்கள் இவ்வாறு தன் படையை நூழிலாட்டியதனைக் கண்ட சூரபதுமன் பரமசிவன் தனக்கு வழங்கிய நெருப்புச் சக்கரப்படையினைத் தேவர்கள் ஏங்கும்படி ஏவினன். அச்சக்கரப்படையை எம்பெருமான் தன்றிருக்கையினை நீட்டி ஏற்றருளினன். அதுகண்டு சினத்தாலோங்கிய அச்சூரபதுமன் தன் மாயையாலே எண்ணிறந்த உருவங்கொண்டு சினந்து (எப்பக்கத்துஞ் சூழ்ந்துகொண்டு) போர் செய்யலானான். காங்கேயனாகிய எம்பெருமான் அறிவுப்படையாலே அவனுடைய மாயையை அழித்தொழித்தனன்.

(வி - ம்.) தழற்றிகிரி - தீயாலானதொரு தெய்வச்சக்கரப்படை. விண்ணோர்கள் ஏங்கத் திகிரி விடுத்தனன் என்க. உருத்து - சினந்து. சேதனம் - ஈண்டு அறிவு. ஆல் : அசை.

(559)

 அலைத்திடு நாண்கொடு சூரன்ம றைந்துய ரண்டமு கட்டுவழித்
 தலைத்தலை நின்றறை கூவியப் பாற்றவி ரண்டம டுத்தனனால்
 இலைத்தலை வேல்வல னேந்தியு முற்றெதி ராடவொ ழிந்தவுணன்
 மலைத்தலை வீழ்ந்துப லண்டமும் வாவினன் வாவின னம்மிறையும்.

(இ - ள்.) மாயை அழிந்தமையாலே சூரபதுமன் தன்னெஞ்சினை வருத்தாநின்ற நாணத்தை மேற்கொண்டு அவ்விடத்தினின்று மறைந்து உயர்ந்த அண்டமுகட்டின் வழியே ஓடுபவன், இடந்தோறும் இடந்தோறும் நின்று எம்பெருமானை அறைகூவி யழைத்தழைத்துச் சென்று, இவ்வண்டமுகட்டின் அப்பாலுள்ள புறவண்டத்தை எய்தினன். இலையமைந்த தலையையுடைய வேற்படையை ஏந்துபவனாகிய எம்பெருமானும் அங்கங்கே சென்று அவனோடு போரெதிர்ந்து ஆற்றுதலானே, அவ்வவுணன் மேலும் அவனோடு போராடுதலைவிரும்பிப் பற்பல அண்டங்களினும் தாவிச் சென்றனன். எம்பெருமானும் அவனைத் தொடர்ந்து தாவிச் சென்றருளினன்.

(வி - ம்.) நாண் - நாணம். அறைகூவல் - போர்க்கு வலிந்தழைத்தல். வேல்வலனேந்தி - பெயர். மலைத்தலை - போர்செய்தலை. வீழ்ந்து - விரும்பி.

(560)