பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்857

நூறாயிரம் நூறாயிரம் அம்புகளாகப் பெருகி இலக்கமறவரும் எட்டு மறவரும் பூதரும் தேவரும் இன்னோரன்ன பிறரும் வியக்கும்படி எம்பெருமானுடைய வேற்படைக்கு இலக்காகவிருக்கின்ற சூரபதும னியற்றிய மாயைச் செயலனைத்தையும் மாய்த்து மீளா நின்றன.

(வி - ம்.) இலக்கம் - நூறாயிரம். அட்டு - அழித்து.

(583)

 தனித்து நின்ற சூர னைத்த டங்கை பன்னி ரண்டுளான்
 அனித்த யாக்கை நித்த மென்ற னந்த மாயை செய்கினும்
 துனித்து நிற்றி நின்றன் மாயை முற்று றத்து ரந்தனம்
 இனித்தெ ரிக்கு மெம்மி யற்கை காண்டி யென்று வீறினான்.

(இ - ள்.) மாயை அழிதலானே தமியனாய் நின்ற சூரபதுமனைப் பன்னிருகைப் பெருமான் நோக்கி "ஏடா ! நீ நிலையுதலில்லாத உடலை நிலையுதலுடையதாக மயங்கி அதனை ஓம்புதற்கு எல்லையற்ற மாயச் செயலைச் செய்தாலும் அவை அழிந்துபோம்படி அகற்றினேம். மீண்டும் பகைத்தே நிற்கின்றனை; அளியை நின்பாற் கருணையானே இனியாம் நினக்குணர்த்துகின்ற எம்முடைய இயல்பினையும் காண்பாயாக என்று திருவாய்மலர்ந்தருளித் தன்னியல்பின்கண் மேம்படா நின்றனன்.

(வி - ம்.) அனித்தம் - நிலையுதலில்லாதது. நித்தம் - நிலையுடையது. அனந்தம் - முடிவற்ற. துணித்து - பகைத்து. தெரிக்கும் - உணர்த்தும். வீறினான் - மேம்பட்டான்.

(584)

 மாய னாதி தேவ ரும்வ யங்கு மற்று லோகமும்
 ஆய வெண்ணி லண்ட மும்ம னைத்து மங்க மாயுற
 மேய வெம்பி ரானி யற்கை மெய்யை யஞ்ச விண்ணவர்
 தூய னஞ்ச லஞ்ச லென்று தூம லர்க்கை காட்டினான்.

(இ - ள்.) திருமால் முதலிய தேவர்களும் சிவலோக முதலிய உலகங்களும் இவற்றிற்கு இடமான எண்ணிறந்த அண்டங்களும் பிறவுமாகிய எல்லாப்பொருளும் தனக்கு உறுப்பாகப் பொருத்தப் பேருருக்கொண்ட எம்மையாளுடையானது இயற்கை உருவத்தினைக் கண்ட தேவர்கள் பெரிதும் அஞ்சாநிற்ப, அவர் நிலைமைகண்ட பெருமான் தனது தூயமலர்போன்ற அபயக்கையினைக் காட்டி, அஞ்சற்க! அஞ்சற்க! என்று அபயமளித்தருளினன்.

(வி - ம்.) மாயன் - முதலியோர் உயிரினம். உலகம் உயிரில்லன. எனவே இருவகைப் பொருளும் அங்கம் என்றவாறாயிற்று. இறைவன் அங்கி என்க.

(585)

 விம்மி தத்த னாகி வெய்ய சூர னிற்ப மெய்யருள்
 செம்மல் சற்ற ளிப்ப வுண்மை கண்டு செப்பு மம்மவோ
 அம்மை யெத்த வங்க ளாற்றி னேன்கொன் மாயை யாமுரு
 மும்மை யுங்க டந்த வன்மு ழுத்த மெய்தெ ரிப்பவே.