பக்கம் எண் :

858தணிகைப் புராணம்

(இ - ள்.) சூரபதுமன் மருட்கையுடையனாய் ஒன்றுந்தோன்றாமல் நிற்ப உயிர்கட்கு மெய்யுணர்ச்சியை அருளிக்காக்கும் முழுமுதல்வனாகிய எம்பெருமான் அவ்வசுரனுக்கு ஒருசிறிது மெய்யுணர்ச்சியை வழங்கியருள, அவ்வளவில் அவன் சிறிது மெய்யுணர்ந்து கூறாநிற்பவன், "அம்மம்ம ! எளியேன் முற்பிறப்பிலே எத்தகைய தவத்தைச் செய்தேனோ இறப்பெதிர்வு நிகழ்வு என்னும் முக்காலத்தும் மாயையாலாய உடம்பினைக் கடந்துநின்ற எம்பெருமான் தனது எல்லாந்தானேயாகிய பேரருட்டிருமேனியை எளியேனுக்கு இங்ஙனம் காட்டியருளுதற்கு.

(வி - ம்.) விம்மிதம் - மருட்கை. மெய்யுணர்ச்சியை அருள் செம்மல் என்க. மும்மை - காலமூன்று. முழுத்த - முழுமையான.

(586)

 பால னென்றி கழ்ந்த தும்ப டுப்ப மிக்கி ரும்படை
 மேல டர்ப்ப வுய்த்த தும்மெ லாம்வி ளங்கு தோத்திரம்
 சால நல்கு பூசை யாத்த ழீஇயி னன்வி டைப்பனேல்
 கோல மேனி காட்ட வல்ல னல்ல னென்கண் கொள்ளவே.

(இ - ள்.) ஐயகோ ! எளியோன் இத்தகைய பெருமானென்றறியாது கெட்டேன் ஆயினும் அப்பெருமான், யான் சிறுவன் என்று இகழ்ந்ததனை வாழ்த்தாகவும், கொல்லுதற்பொருட்டு மிகப்பெரிய படைகளை ஏவிப் போர் செய்வித்ததனை, அன்போடு மிகவும் தனக்கியல்பான பேரருள் காரணமாக ஏற்றருளி எனக்கிப்பேற்றை அளித்தருளினான். இன்னும் யான் இவனைப் பகைப்பேனாயின் இத்தகைய எழிலுடைய அருட்டிருமேனியை என்கண்நிரம்ப எனக்குக் காட்டியருள்வான் அல்லன்.

(வி - ம்.) பாலன் - சிறான். இகழ்ந்து தோத்திரமாகவும் அடர்ப்ப உய்த்தது பூசையாகவும் தழீஇயினன் எனநிரனிறையாகக் கொள்க. விடைத்தல் -
பகைத்தல்.

(587)

 ஒருக ணத்தி லட்டு மீள வல்ல வும்பர் தம்பிரான்
 பொருக ளத்து நேர லானெ னப்பு குந்த மர்த்ததென்
 திருகு யிர்ச்செ ருக்க டர்த்த தல்ல தில்லை யீதுசேர்
 முருகு கொப்ப ளித்த தார்மு குந்த னுக்கு மெய்துமோ.

(இ - ள்.) ஒருநொடிப் பொழுதிலே அனைத்தையும் அழித்துமீளும் வரம்பிலாற்றலுடைய தேவதேவன், எளியேனை ஒருபகைவனெனக் கருதி இப்போர்க்களத்திலே புகுந்து போர் ஆற்றியது, எளியேனுடைய மாறுபாடு பொருந்திய உயிரினது செருக்கினை அழித்தற்பொருட்டன்றி வேறு காரணமில்லை. இத்தகையபேறு, தன்பாலூறிய தேனைக் கொப்பளித்து வண்டுகட்கு வழங்கிய துளவமாலையணிந்த திருமாலுக்கும் வாய்த்தலரிதே.

(வி - ம்.) உம்பர் - தேவர். நேரலான் - பகைவன். திருகு - மாறுபாடு. சேர்முருகு : வினைத்தொகை. முருகு - தேன். முகுந்தன் - திருமால்.

(588)