பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்859

 உளங்கொ ளாத விம்மி தத்தி னின்ன வோதி நின்றிடும்
 வளங்கு லாவு சூரன் போத மாற்றி முன்னு ருக்கொடு
 விளங்கி னான்வி சாகன் போர்க்கு டைந்தி ழைத்த மாயையால்
 துளங்கு வேன லெனெ னத்து ணிந்தொர் சூழ்ச்சி முன்னினான்.

(இ - ள்.) இவ்வாறெல்லாம் கூறி அறிவுவளம் வந்துற்ற சூரபதுமன் நெஞ்சங்கொள்ளாத மருட்கையோடு நின்றனனாக. அப்பொழுது எம்பெருமான் தானளித்தருளிய மெய்யுணர்வினை (மலபரிபாகமின்மையால்) மாற்றித் தான்கொண்ட பேருருவினையும் மறைத்துப் பண்டைய வடிவோடு திகழ்ந்தனன். மீண்டும் தனதியற்கையறிவு வந்தெய்தப் பெற்ற சூரபதுமன், ஓகோ ! இம்முருகன் எனது போர்க்குடைந்தமை யானே இத்தகையதொரு மாயையான் என்னை மயக்கினன் போலும். நன்றுநன்று இம்மாயையானே யான் அசையேன் என்று துணிந்து மீண்டும் ஒரு சூழ்ச்சி கருதினான்.

(வி - ம்.) வளம் - அறிவு வளம். போதம் - அறிவு. விசாகன் - முருகன். முன்னினான் - கருதினன்.

(589)

 பால னைக்கொ ணர்ந்த தேவர் தங்க ளைப்ப டுத்துமுன்
 பால னைப்ப டுப்ப லென்று மந்தி ரம்ப டர்ந்தனன்
 ஞால மாதி ரங்கள் வானு நள்ளி ருட்பி ழம்புற
 ஆல மென்ன வெண்ணில் வாய்கை கொண்ட வாக்கை யாளனாய்.

(இ - ள்.) என்னை அழித்தற்கு இச்சிறுவனை அழைத்துவந்த தேவர்களை முன்னர்க் கொன்றொழித்துப் பின்னர், இச்சிறானைக் கொல்லு வேன் என்று கருதி மந்திரங்கணித்தனன். மந்திரம் கணித்ததுணையானே நிலம் திசைகள் வானம் ஆகிய யாண்டும் செறிந்த இருள்திணியாநிற்ப, நஞ்சுபோன்ற எண்ணிறந்த வாய்களும் கைகளும் உடைய பேருடலை யுடையனாய்.

(வி - ம்.) பாலன் - முருகன். படுத்து - கொன்று. படர்தல் - நினைதல். ஆலம் - நஞ்சு.

(590)

 இருட்பி ழம்பி னூடு போந்தி றுப்ப முன்னு கின்றனன்
 மருட்சி மிழ்ப்ப னுக்கு மாய னாதி யோர்க ளோதியால்
 தெருட்சி கொண்ட றிந்த னர்தி கைத்து ளார்பெ யர்ந்திலார்
 வெருட்சி கொண்டு விம்மி னார்வி சாக வென்று கூவுவார்.

(இ - ள்.) தன் மந்திரத்தானே தோன்றி உலகை மறைத்த அப்பேரிருட் பிழம்பினூடேசென்று தேவர்களைக் கொல்லக் கருதினன். ஆணவமலத்தின் கட்டினைக் குறைத்துக்கொண்ட திருமால்முதலிய தேவர்கள் தம்முடைய ஓதியாலே தெளிவடைந்து சூரபதுமன் கருதியதனை உணர்ந்து திகைத்தனர். அவ்விருட்பிழம்பினூடு இயக்க மிலராய் நின்று அச்சங்கொண்டு நெஞ்சம் விம்மி முருகா ! முருகா ! என்று ஓலமிடுவாராயினர்.