பக்கம் எண் :

860தணிகைப் புராணம்

(வி - ம்.) மருள் - மலத்திற்கு ஆகுபெயர். அனுக்குதல் - தேய்த்தல். ஓதி - மூன்றுகால நிகழ்ச்சிகளையும் உணரும் அறிவு.

(591)

 பண்ட னைப்ப டுத்த வம்மை பால வோல மாலமுண்
 கண்ட னெற்றி யங்கி தந்த கந்த வோல மாமுகச்
 சண்ட னைத்த டிந்த பிள்ளை தம்பி யோலம் வெய்யசூர்
 மிண்டி னைத்த கர்க்க நின்ற வேல வோல மோலமே.

(இ - ள்.) பண்களைக் கீழ்ப்படுத்திய இனிய மொழியையுடைய உமையன்னையாரின் திருமகனே ஓலம் ! நஞ்சுண்டகண்டன் நெற்றிக் கண்ணாகிய தீயருளிய கந்தவேளே ! ஓலம். கயமுகாசுரனாகிய கொடியவனைக் கொன்றருளிய விநாயகப் பெருமானுடைய அருமைத்தம்பியே ஓலம். கொடிய இச்சூரபதுமனுடைய கொடுமையை அழிக்க வந்து நின்ற வேலனே! ஓலம், ஓலம்.

(வி - ம்.) ஓலம் - அஞ்சினோர் துணைவேண்டிக் கூவுமொருசொல். அங்கி - நெருப்பு. மாமுகச்சண்டன் - கயமுகாசுரன். சூர் - சூரபதுமன்.

(592)

 மூல மாய னைத்து மான மூல வோல மோலமே
 கால மாய்க்க டந்து நின்ற கால வோல மோலமே
 பால னாய்மு துக்கு றைந்த பால வோல மோலமே
 வேல வோல மோல மென்ன யாவ ரும்வி ளித்தனர்.

(இ - ள்.) எல்லாப் பொருட்கும் வேராக எல்லாப் பொருளுமான முதல்வனே ! ஓலம் ஓலம். காலமாகி அக்காலத்தையும் கடந்துநின்ற காலகாலனே! ஓலம், ஓலம். இளையனாயிருந்தே பேரறிவுப் பிழம்பா யிருக்கின்ற முருகனே! ஓலம். ஓலம். வேற்படையோனே ஓலம், ஓலம் என்று அமரர் எல்லோரும் கூவினர்.

(வி - ம்.) மூலம் - வேர். கால - காலகாலனே என்க. முதுக்குறைவு - அறிவு.

(593)

 ஊர்தி மஞ்ஞை யான வும்பர் கோன்ப ணிந்து காரிருள
 சார்தல் செய்து தேவ ராவி தான்ம டிப்ப வூடுசெல்
 சூர்த டிந்தி டும்பை யாந்து ரப்ப நல்கு கென்றனன்
 வார்த டக்கை வேற்ப டைம கிழ்ந்து நம்பி விட்டனன்.

(இ - ள்.) அப்பொழுது மயிலூர்தியாயிருக்கின்ற தேவேந்திரன் முருகப்பெருமானை வணங்கி "எம்பெருமானே ! கரியஇருள் படரும்படி செய்து தேவர் உயிரை மாய்த்தற் பொருட்டு அவ்விருளூடேசெல்லா நின்ற சூரபதுமனை இப்பொழுது கொன்று அடியேங்கள் துன்பத்தை விடும்படி திருவருள்புரிந்தருள்க என்றிரந்தனன். அதுகேட்ட எம்பெருமான் மகிழ்ந்து நெடிய பெரிய தன் திருக்கையிடத்தேயுள்ள வேற்படையை ஏவினன்.