பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்861

(வி - ம்.) மஞ்ஞை - மயில். உம்பர்கோன் - இந்திரன். தான் : அசை. சூர் - சூரபதுமன். நம்பி - முருகன்.

(594)

 விடுக்கு முன்னர் மாயை நீவ வெய்ய சூரன் மாவடி
 வெடுத்து நீர்க்க டற்கண் வேர்க ளீண்டு சாகை கீழ்மிசை
 அடுத்த வைப்பெ லாம டர்த்த ழன்று தேவர் தங்களைப்
 புடைத்து நிற்ப வங்கி கான்று போந்த வேற டிந்ததே.

(இ - ள்.) வேற்படையை விட்டவளவிலே மாயை விலக, கொடிய சூரபதுமன் மாமரத்தின் வடிவமெடுத்து நீரையுடைய கடலின்கண் வேர்களும் நெருங்கியகிளைகளும் ஆகிய உறுப்புக்களானே கீழும்மேலும் உள்ள உலகங்களையெல்லாம் அழித்துச் சினந்து தேவர்களைப்புடைத்து நிற்புழி, தீக்கான்று சென்றவேற்படை அம்மாமரமாகிய சூரபதுமனைக் கொன்றது.

(வி - ம்.) நீவ - விலக. சாகை - கிளை. வைப்பு - இடம். அழன்று : சினந்து.

(595)

 கொக்கு ருச்செ குத்த லுங்கு லாய தன்னு ருக்கொடு
 தக்க தன்னு டைக்கி டந்த தாரை வாளு ரீஇயடப்
 புக்க னன்பொ ருக்கெ னக்கி ழித்தி ரண்டு கூறதா
 மைக்க டற்க ணிட்டு மீண்டு வள்ளல் கைத்த லத்ததே.

(இ - ள்.) மாமரவுருவத்தை வேற்படை யழித்தவளவிலே சூரபதுமன் தன் இயற்கை வடிவத்தைக்கொண்டு தகுதியுடைய தனது உடைமேற்கிடந்த கூரியவாளினை உருவிப் போராற்றத் தொடங்கினன். அதுகண்ட வேற்படை ஞெரேலென அவனுடலிற் பாய்ந்து அதனை இரண்டு கூறாகப் பிளந்து கரியகடலிலே போகட்டுவிட்டு மீண்டுவந்து எம்பெருமானுடைய திருக்கையின்கண் எய்தியது.

(வி - ம்.) கொக்கு - மாமரம். செகுத்தல் - அழித்தல். உடை - ஆடை. தாரை - கூர்மை. வள்ளல் - முருகன்.

(596)

வேறு

 அம்மையி லெண்ணில் கால மாற்றிய தவப்பே றெய்த
 இம்மையி லிரண்டு கூறு மெழுந்துகுக் குடம யூர
 விம்மித வுருவங் கொண்டு விண்ணவர் மருள வையம்
 மும்மையுஞ் சிதர்ப்ப தென்ன முழங்கிமே லெழுந்த வன்றே.

(இ - ள்.) முற்பிறப்பிலே எண்ணிறந்தகாலம் நோற்ற நோன்பின் பயன்வந்து கைகூடுதலானே இப்பிறப்பின்கண் எடுத்த உடலின் இரண்டுகூறும் தனித்தனி எழுந்து வியத்தகு கோழிச்சேவலும் மயிலுமாக உருவங்கொண்டு தேவர்கள் வியப்பெய்த மூன்றுலகங்களையும் துகள்படச் சிதறுவனபோன்று ஆரவாரித்து அக்கடலினின்றும் மேலே எழுந்தன.