பக்கம் எண் :

862தணிகைப் புராணம்

(வி - ம்.) அம்மை - முற்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. குக்குடம் - கோழிச்சேவல். மயூரம் - மயில். மும்மைவையம் என்க.

(597)

 அருள்விழி சேர்த்த லோடு மாணவ மாதி மூன்றும்
 ஒருவியுள் ளுருகி நிற்ப வூன்றலைப் பொடித்த புள்ளை
 மருவுதி கொடியாய் நந்தம் வாம்பரித் தேர்மே லென்றாங்
 கிருவியூர் மஞ்ஞை நீத்தங் கெதிர்ந்தமா மயின்மேல் கொண்டு.

(இ - ள்.) அங்ஙனம் எழுந்த அப்பறவைகளின்மேல் திருவருள் விழி சாத்தியருளிய அளவிலே அவை தம்முடைய ஆணவம் மாயை கன்மம் என்னும் மூன்றுமலங்களையும் அகன்று நெஞ்சமுருகிநிற்ப எம்பெருமான் அவற்றுள் தலையின்கண் ஊனே கொண்டையாகவமைந்த கோழிச்சேவலை நோக்கி, "நீ நம்முடைய தாவுகின்ற குதிரைபூட்டிய தேரின்கண் நமது கொடியாக" எஞ்ஞான்றும் அமைவாயாக என்று இருத்தியருளிய பின்னர்த் தான் எழுந்தருளியிருக்கின்ற இந்திரனாகிய மயிலூர்தியை விடுத்து அங்கேநின்ற மயின்மேல் எழுந்தருளி.

(வி - ம்.) அருள்விழிசேர்த்தல் என்றது நயனதீக்கையை இருவி - இருத்தி.

(598)

 திரைக்கட லேழு மொன்றாய்ச் சென்றளாய்க் கலவிப் பொங்க
 வரைத்திரள் பொடிக ளாக வானமீன் முகில்கள் சிந்த
 நிரைத்தபல் லுலக மெல்லா நிலைதடு மாற வையன்
 புரைத்தப லண்ட மெல்லாம் பொள்ளெனக் கடவி மீண்டான்.

(இ - ள்.) அலையையுடைய கடல்கள் ஏழும் ஒன்றாய்க் கரை கடந்து ஒன்றனோடொன்று அளாவிக் கலந்து பொங்காநிற்பவும், மலைக் கூட்டங்கள் துகள்படவும், விண்மீன்களும் முகில்களும் வீழவும், நிரல் பட்ட பல்வேறு உலகங்கள் அனைத்தும் தத்தம் நிலைதடுமாறாநிற்பவும் எம்பெருமான் உயரிய அண்டங்கள் பலவற்றினும் விரைந்து செலுத்தி மீண்டருளினன்.

(வி - ம்.) திரைக்கடல் : இரண்டாவதும் பயனும் உடன்தொக்க தொகை. கலவி - கலந்து. ஐயன் - முதல்வன். புரைத்த - உயர்ந்த. பொள்ளென - விரைவுக் குறிப்பு.

(599)

 இருதிறத் தேங்கள் யாமென் றிருவரு மறியா வண்ணம்
 ஒருதிறத் துடலி னூற்றெட் டுகம்பெரும் போகந் துய்த்தல்
 கருதுதன் மறத்த லாதிக் கடனெலா மொருங்கு கூட்டிப்
 பிரிவுசெய் தாண்ட வள்ளல் பெருமையார் கணிக்கற் பாலார்.

(இ - ள்.) யாங்கள் இருவரும் இரண்டுயிர்கள் என்னுமுண்மையை அவ்விருவருமே அறியாதபடி, ஒரோவோர் உடலின்கண் அமைந்து நூற்றெட்டு ஊழிகள் பெரிய இன்பத்தை நுகர்தலும் நினைத்தலும் மறத்தலும் முதலிய உயிர்க் கடமையெல்லாம் இருவர்க்கும் ஒன்றாகப் பொருத்தி ஊழற்றபொழுது இருவராகப் பிரித்து ஆண்டருளிய எம்பெருமானுடைய பெருமையை அளவிட யாரே வல்லுநர்.