| மண்டிய சிறகர்ப் புள்ளாய் வயங்கிய புலவர் தம்மைப் | | பண்டைய வுருவங் கொள்ளப் பணித்தனன் பறப்பை யாகி | | விண்டன ரமரர் யாரும் விரைமலர் மாரி தூர்த்துப் | | புண்டரீ கத்தாள் போற்றிப் பணிந்துபே ருவகை பூத்தார். |
(இ - ள்.) அச்சத்தானே சிறகுகளடர்ந்த பறவைகளாய் மாறி விளங்கிய அமரர்களை எம்பெருமான் முன்னைய உருவங்கொள்ளும்படி அருள்புரிந்தனன். முன்னர்ப் பறவைகளாகி ஓடிஒளித்த தேவரனைவரும் தம்முருவுடன் வெளிப்பட்டு மணமுடைய மலர்மாரி பொழிந்து எம் பெருமானுடைய, செந்தாமரைமலர் போன்ற திருவடிகளை வாழ்த்தி வணங்கிப் பெருமகிழ்ச்சிகொண்டு பொலிவுற்றனர். (வி - ம்.) மண்டிய - அடர்ந்த. புலவர் - தேவர். பறப்பை - பறவை. விண்டனர் - முற்றெச்சம். விரை - மணம். புண்டரீகம் - தாமரை. (604) | போரிடை விழுந்த பூதர் தங்களை யெழுப்பிப் பொல்லாச் | | சூரன்முன் கவர்ந்த தேவர் தொல்வள முழுதுந் தன்பால் | | சாருற வழைத்து வீர வாகுவாற் சயந்த னோடும் | | ஆரும்விண் ணவர்தங் காவ லகற்றிநீ ரிறையை நோக்கி. |
(இ - ள்.) சூரபதுமனோடு ஆற்றியபோரின்கண் மாண்டபூதர்களை உயிர்ப்பித்தருளித் தீமையுடைய சூரபதுமன் பண்டுகவர்ந்துகொண்ட தேவருடைய பழமையான செல்வங்களைத் தனது திருமுன்னர்க் கொணர்வித்துப் பின்னர் வீரவாகுவினாலே சிறைக்கோட்டத்தே வதிந்த சயந்தன் முதலியோரை விடுவித்துப் பின்னர் வருணனைநோக்கி. (வி - ம்.) சூரன் - சூரபதுமன் சயந்தன். - இந்திரன்மகன். காவல் - சிறை. நீரிறை - வருணன். (605) | அவுணர்கோ னகர மான மகேந்திர மழிக்க வேவி | | உவணமேக் குயர்த்தோ னாதி யும்பரோ டாங்குத் தீர்ந்து | | பவனவே கத்தின் முந்தும் படர்சிறை மஞ்ஞை யூர்ந்து | | புவனமேத் தெடுக்குஞ் செவ்வேள் பொருவருஞ் செந்தில் புக்கான். |
(இ - ள்.) சூரபதுமனுடைய நகரமான மகேந்திரத்தை அழிக்கும் படி பணித்துக் கருடக்கொடியை மிகவும் உயர்த்திய திருமால் முதலிய தேவரோடு அவணின்றும் புறப்பட்டுக் காற்றினும் விரைந்துசெல்லும் விரிந்த சிறகினையுடைய மயிலைச்செலுத்தி உலகெலாம் வாழ்த்தும் எம்பெருமான் ஒப்பற்ற திருச்செந்திலை எய்தினன். (வி - ம்.) அவுணர்கோன் - சூரபதுமன். உவணம் - கருடக்கொடி. உம்பர் - தேவர். பவனம் - காற்று. (606) | தானவர் கரந்தி யாங்குத் தவிரினுந் துருவி மீண்டு | | ஞானநா யகற்குக் கூறி நலித்துமென் றகன்றான் போல |
|