| வாங்கு செந்நெலின் கதிர்கவர்ந் தினக்குரீஇ | | மகரநீர்க் கடற்பாங்கர் | | ஓங்கு புன்னையிற் கொறிப்பவங் குணக்குமீ | | னொய்யெனக் கவர்ந்தோடித் | | தேங்கு நீர்ப்பணைக் காஞ்சியிற் கொடியினஞ் | | சேர்ந்துதம் பதிநீங்கிப் | | பாங்கு வேற்றிடம் புகுங்கொடி யோரெனப் | | பயில்வது முளதாங்கண். |
(இ - ள்.) (மருத நிலத்தின்கண்) முதிர்தலால் வளைந்த செந்நெற்களின் கதிர்களைக் கூட்டமாகிய குரீஇ யினங்கள் வாயாற் கவர்ந்து மகர மீனை யுடைய நீர் நிறைந்த கடற் பக்கத்தே உயர்ந்த புன்னை மரங்களின் மேலிருந்து கொறியாநிற்ப அந்நெய்த னிலத்தின்கண் உணக்குகின்ற மீனைக் காக்கையி னினங்கள் விரைவாகக் கவர்ந்து சென்று நீர் நிறைந்த வயல்களோடு கூடிய மருத நிலத்தின்கணுள்ள காஞ்சி மரங்களில் பொருந்தி (தக்க இடமும் உணவுக்காம் பொருளும் இருப்ப) பக்கத்திலுள்ள வேற்றிடங்களுக்குச் செல்லும் கொடியவர்களைப் போலத் தங்குவதும் அவ்விடத்துளது. (வி - ம்.) கொறித்தல் - தின்னுதல். கொடி - காக்கை. தக்க இடமும் உணவுக்காம் பொருளும் இருக்க அயலிடத்திற்குச் சேறலின் கொடியோ ரென்றார். தம் பதியினின்றும் பிறர் பொருளைக் கவர்ந்து வேற்றிடம் புகும் கொடியோ ரெனினும் அமையும். கொடியோரைப் போலக் கொடியினமும் செய்தது எனக் கூறிய சொன்னயம் காண்க. (165) | குரும்பி தேரிய முதையலூர்ப் படப்பையுங் | | குன்றினெண் குகள்செல்ல | | இரும்பு லாரிய புனம்வயற் கொல்லையா | | னீன்றகன் றுகள்செல்ல | | அரும்பு மூசிய குறுஞ்சுனை கற்சுனை | | யாவிவண் டுகள்செல்ல | | வரம்பி லாரிமை யாரியன் முறைதெரி | | வயினெனக் கலப்போர்சார். |
(இ - ள்.) உழுத புழுதியினையுடைய முல்லை நிலத்தின்கண்ணும் ஊர்ப்புறத் தோட்டங்களிலும் மலையின்கண்ணுள்ள கரடிகள் புற்றாஞ் சோறாகிய உணவை யாராயச் செல்லாநிற்க, பெரிய புல்லாகிய உணவை யுண்ணக் குறிஞ்சி நிலத்தும் வயலினிடத்தும் முல்லை நிலத்தின்கணுள்ள பசுக்களீன்ற கன்றுகள் செல்லாநிற்ப அரும்புகள் மொய்த்த முல்லை நிலத்தின்கணுள்ள குறுஞ்சுனைகளிலும் குறிஞ்சி நிலத்தின்கணுள்ள சுனைகளிலும், மருத நிலத்தின்கணுள்ள நீர்நிலையிற் றங்குகின்ற வண்டுகள் செல்லாநிற்பக் கயவருந் தேவரு மியல்கின்ற முறைகளைத் தெரிவிக்கின்ற இடம்போலக் கலத்தல் ஒரு பக்கத் துளது. |