| நளிமலர்மென் பள்ளி நயந்திருந்தான் போலும் | | நாயே னுளமு நயந்திருந்தான் போலும். |
(இ - ள்.) தோன்றி வானத்திலே பரவியபொழுது பரமசிவன் ஏவலைக் கொள்ளுதலானே காற்றும் தீயும் நெடிய கங்கை நீரும் தாங்கமாட்டாது வருந்துதற்குக் காரணமான மகவு, யாவன் எனின்? களித்த வண்டுகள் செறிந்த அழகிய சரவணப் பொய்கையின்கண் செறிந்த தாமரைப் பூம்பாயலை விரும்பி வீற்றிருந்தோனும் அடிநாயேன் நெஞ்சத்தும் விரும்பியுறைந்தோனும் ஆகிய முருகப் பெருமானே யாவன். (வி - ம்.) ஞெமிர்தல் - பரவுதல். வியம் - ஏவல். வழித்தோன்றல் - மகவு. ஞிமிறு, தேன் என்பன வண்டின்வகை. பொய்கை - சரவணப் பொய்கை. (19) | அறிவிரண்டு மாயா வலங்கறிவிற் றாழ்ந்தோர் | | செறிவகன்ற யாக்கைச் செருத்தே ருகைப்போன் | | உறுவலியின் வைய முடற்று தகரூர்ந்த | | எறுழ்மிகுத்த நாற்கோட் டிபப்பாகன் போலும் | | எழிற்கலவ மஞ்ஞை யினிதுகைத்தான் போலும். |
(இ - ள்.) உயிர் அறிவும் பாசஅறிவுமாகிய இருவகையறிவும் கெட்டுழி விளங்குவதாகிய பதியறிவிலே முழுகிய சீவன் முத்தருடைய செறிவற்ற உடம்பாகிய போர்த்தேரினைச் செலுத்துபவன் யாவனெனின்? மிக்க வலியுடைமையாலே உலகினை அலைத்த ஆட்டுக்கிடாவினையும், வலிமை மிக்க நான்கு கோட்டினையுடைய ஐராவதத்தினையும் அழகிய தோகையினையுடைய மயிலையும் இனிதாக ஊர்ந்த முருகப்பெருமானே யாவன். (வி - ம்.) இரண்டறிவு என்றது பசுஞானம் பாசஞானங்களை. அலங்குதல் - விளங்குதல். இறைபணி நிற்போர் செயலெல்லாம் தன்செயலாகக் கோடலின். அறிவிற்றாழ்ந்தோர் உடற்றேரை உகைத்தோன் என்றார். (20) | நாரண னின்னண நன்றுது தித்தலும் | | பூரணன் மாமயிற் போத்தரு குந்திச் | | சீரணி மாதவஞ் செய்திளைத் தாயெனக் | | காரணி மெய்கரங் கொண்டுதை வந்தான். |
(இ - ள்.) திருமால் இவ்வாறு பெரிதும் வாழ்த்தியவளவிலே முழுமுதல்வனாகிய முருகப்பெருமான் பெரிய தனது மயிலூர்தியை அவனுக்கு அணித்தாகச் செலுத்தி அவனை இனிதினோக்கி அன்பனே ! நீ புகழ்பூண்டற்குக் காரணமான பெரிய தவத்தினைச் செய்து உடல் மெலிந்தனைகாண் என்று முகமன் கூறித் தனது முகிலையொத்த வாய்மையான திருக்கையினாலே அவனுடலைத் தடவியருளினான். (வி - ம்.) நன்று - பெரிது. சீர் - செல்வமுமாம். தைவருதல் - தடவுதல். (21) |