பக்கம் எண் :

886தணிகைப் புராணம்

 ஆர்ங்கதிர் வேணிய னாக்கிய ளித்தெதிர்
 ஈர்ங்கவுண் மாமுகன் மார்பிடு மாழி
 சார்ங்கமு மற்றவுஞ் சாமிய ளித்தனன்
 பீர்ங்குரு வீயுற ழாடையன் பெற்றான்.

(இ - ள்.) நிரம்பிய ஒளியையுடைய சடையையுடைய சிவபெருமானாற் படைத்து வழங்கப்பட்டு ஈரிய கவுளையுடைய யானைமுகாசுரன் மார்பிலே ஏவப்பட்டதுமான சக்கரப்படையினையும் சார்ங்கமென்னும் விற்படையினையும் சங்க முதலிய பிறபடைகளையும் எம்பெருமான் வழங்கியருள, பீர்க்கினது நிறமிக்க பூவினை ஒத்த பொன்னாடையினை யுடைய அத்திருமால் ஏற்றுக்கொண்டனன்.

(வி - ம்.) ஆரும் - என்ற செய்யும் என்னெச்சத்தின் ஈற்றுயிர் கெட்டு ஆர்ம் என்றாயிற்று. சாமி - முருகன். பீர்க்கு, பீர்ங்கென விகாரமுற்றது. உரு - நிறம்.

(22)

 பங்குனி யுத்திரம் பாற்கரன் வாரமும்
 தங்கிய தின்னரு டந்தரு ளித்தினம்
 இங்கிதி லிச்சுனை யீர்ம்புன லாடுவோர்
 எங்கணும் வேட்டன் வெய்துக வென்றான்.

(இ - ள்.) பின்னரும் அத்திருமால் எம்பெருமானே ! நீ எளியேற்கு இனிய அருளித்த இந்நாள் பங்குனித் திங்களில் உத்திரநாளும் ஞாயிற்றுக்கிழமையும் பொருந்தப்பெற்றுள்ளது. ஆதலால் எதிர்காலத்தே ஆண்டுதோறும் இங்ஙனம் நிகழும் நாளிலே இந்தச் சுனையின்கண் குளிர்ந்த நீரின்கண் ஆடுபவர் எவ்வுலகத்தும் தாந்தாம் விரும்பிய பேறுகளை எய்துவாராக வரந்தருதல் வேண்டும் என்றிரந்தனன்.

(வி - ம்.) பாற்கரன் - ஞாயிறு. இதில் - இந்நாளில்.

(23)

 அவ்வர முங்கொடுத் தந்தண ருச்சியும்
 எவ்வமி லாரணத் துச்சியு மேய்ந்த
 கவ்விய பூங்கழ லான்கமழ் கோயிலுள்
 செவ்வியு ளாரொடுஞ் சென்றுவ திந்தான்.

(இ - ள்.) அறவோருடைய தலைமிசையும், இளிவரவில்லாத மறையின் உச்சியினும், பொருந்திய கட்டப்பட்ட அழகிய கழலையுடைய எம்பெருமான் திருமாலுக்கு அவ்வரத்தினையும் நல்கிப் பின்னர் மணங்கமழ்தற்கிடமான தனது திருக்கோயினகத்தே செவ்வியுடைய மெய்யடியாரொடு சென்று உறைந்தருளினன்.

(வி - ம்.) அந்தணர் - எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும்அறவோர். ஆரணம் - மறை. செவ்வியுளார் - அன்பர்.

(24)