பக்கம் எண் :

இந்திரன் அருள்பெறு படலம்887

 வாடிய பொங்கர்ம ழைக்கும லர்ந்தென
 நீடிய செல்வநி றைந்தெழு மாயன்
 வீடலி லாதுள்வி சாகனை வைத்தனன்
 கூடிவை குந்தங் குளிர்ந்துயிர் காத்தான்.

(இ - ள்.) வெயிலாலே வாடிக்கிடந்த பொழில் மழை பெய்துழித் தழைத்து மலர்ந்தாற்போன்று நெடிய செல்வத்தானே நிரம்பி மகிழ்ந்து அவ்விடத்தினின்றும் புறப்பட்ட திருமால் ஒழிவின்றி முருகப்பெருமானைத் தன் நெஞ்சினுள்ளே நினைப்போனாய் மனங்குளிர்ந்து தனது வைகுந்தத்தை எய்தி மன்னுயிர்களைக் காத்தற்றொழிலைச் செய்திருந்தனன்.

(வி - ம்.) பொங்கர் - பொழில். மழைக்கு : உருபுமயக்கம். வீடல் - ஒழிதல். விசாகன் - முருகன். மாயன் குளிர்ந்து என ஒட்டுக.

(25)

 அந்தணிர் மாயன டுத்துவ ரங்கொடு
 சிந்தனை முற்றிய செய்தி தெரித்தாம்
 இந்திர னோடிமை யார்வரம் பெற்றுறு
 மைந்தின ராகிய வண்மையுஞ் சொல்வாம்.

(இ - ள்.) துறவோரே இதுகாறும், திருமால் இத்திரு தணிகைமலையினை எய்தி எம்பெருமான்பால் வரம்பெற்றுத் தனது குறிக்கோள் நிறைவுறப்பெற்ற செய்தியைக் கூறினேம். இனி இந்திரனையுள்ளிட்ட தேவர் ஈண்டெய்தி எம்பெருமான்பால் வரம்பெற்று மிக்க வலிமையுடையோராகியதற்குக் காரணமான எம்பெருமானுடைய வள்ளன்மையையும் கூறுவேம் கேட்பீர்.

(வி - ம்.) அந்தணிர் : விளி. சிந்தனை - குறிக்கோள். உறு - மிக்க. மைந்து - வலிமை. வண்மை - வள்ளற்றன்மை.

(26)

நாரண னருள்பெறுபடலம் முற்றிற்று.

ஆகச் செய்யுள் - 2045.