பக்கம் எண் :

892தணிகைப் புராணம்

(இ - ள்.) புண்போன்று வருத்துமியல்புடைய வலிய அசுரக்குலத்தின் ஆற்றலானே தாம் இடையன் கொன்ற மரம் போல வலிமை யழிந்து பற்றுக்கோடு ஒன்றுமின்றித் தீர்ந்த செவ்வியிலே எழுந்தருளிவந்து அருள் செய்த பேரருளின் தன்மையை நினைந்து நெஞ்சுருகி நெடிது பொழுது எம்பெருமான் திருமுன்பு பரவசமாய் நின்று பின்னர் அவ்விடத்தே அப்பெருமானுடைய செந்தாமரை மென்மலரை வென்ற திருவடிகளை நெஞ்சத்தே இருத்திப் புறப்பட்டனன்.

(வி - ம்.) இரணம் - புண். எறுழ் - வலிமை. ஆயன் கொன்றமரம் - ஆயனால் தழைகளை அரியப்பட்டமரம். இம்மரம் நாளடைவில் நலிந்து பட்டொழியும். "இடைமகன் கொன்ற வின்னாமரத்தினேன்," என்றார், சிந்தாமணியினும் (1914) பாணி - காலம். அருணம் - சிவப்பு.

(12)

 தோத்தி ரத்தொடு சூழ்ந்து தாழ்ந்தொரு சூழல் வைகிம கிழ்ச்சியில்
 பாத்தி ரம்பெற மாசை தூசுப கட்ட ருங்கலன் யாவையும்
 ஆர்த்தி மந்திர மெண்ணி யன்றொழி வெய்த வங்கண கன்றுபோய்ச்
 சீர்த்த கோயிலி னண்மை யிற்சுனை தென்பு றத்தெதிர் கண்டனன்.

(இ - ள்.) வாழ்த்துப் பாடிடுதலோடு திருக்கோயிலை வலம்வந்து வணங்கி அயலிலுள்ளதோரிடத்தே இருந்து உவகையோடு நல்ல பாத்திரமாவார் பெறும்படி பொன்னும் ஆடையும் பெரிய அணிகலனும் ஆகிய இன்னோரன்ன எப்பொருளையும் வழங்கி மந்திரங் கணித்து அற்றைநாள் கழிவெய்த அவ்விடத்தினின்றும் அகன்றுசென்று புகழுடைய அத்திருக்கோயிலின் தென்புறத்தில் ஒரு சுனையைக் கண்டான்.

(வி - ம்.) பாத்திரம்பெற என்பதற்குத் தீவினையினின்றும் விலகி நிலைபெறும் பொருட்டு எனினுமாம். இப்பொருட்கு மாசை முதலியன திருக்கோயிற்கு வழங்கி என்க.

(13)

 ஆவ யிற்புகுந் தாடி நாட்கட னாற்றி யாரண நாடரும்
 தேவ தேவன ருச்ச னைப்பணி செய்ய வெண்ணிவி சும்பிடைப்
 பூவ மன்றொளிர் கற்ப கப்பொழி லூடு பூத்தம டுக்கிளைத்
 தோவ ருந்தனி யுற்ப லக்கொடி யொய்யெ னக்கொணர் கென்றனன்.

(இ - ள்.) அச்சுனையின்கண் இறங்கி ஆடி நாட்கடனியற்றி மறைகளும் தேடிக்காண்டற்கியலாத தேவதேவனாகிய முருகப்பெருமானுக்கு வழிபாட்டுத் திருப்பணி செய்தற்கு நினைந்து வானுலகத்தின்கண் மலர்கள் செறிந்து ஒளிர்கின்ற தனது கற்பகப் பூம்பொழிலின்கண் மலர்ந்த மருவின்கட் டோன்றி அழிவில்லாது நிலைபெற்ற ஒப்பற்ற செங்கழுநீர் மலர்க்கொடியினை விரைந்து கொணர்மின் என்று பணியாளர்க்குக் கட்டளையிட்டனன்.

(வி - ம்.) ஆரணம் - மறை. ஆரணமும் எனல்வேண்டிய சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. அமன்று - செறிந்து. ஒய்யென : விரைவுக் குறிப்பு.

(14)

 சிலத ரோடினர் பொள்ளெ னக்கொடு சென்று தாழ்ந்தனர் வைகலும்
 மலர்தல் வேட்டம னத்தி னான்வளர் கோயில் சூழ்தல்வ லித்தொளி