| அலர்வி மானமு றுத்து மாறவ மாற்று கின்றசு னைத்தலை | | உலவை யொன்றுடை யான்க ழற்றுணை யோங்கு பூசையு ஞற்றினான். |
(இ - ள்.) பணியாளர் ஓடி அம்மலர்க் கொடியினை விரைந்து கொண்டுவந்து கொடுத்து வணங்கினர். அக்கொடி நாடொறும் மலர்தல்வேண்டும் என்று விரும்பிய மனதையுடைய இந்திரன் அவ்விடத்தே உயரிய திருக்கோயில் ஒன்றனைச் சமைத்தல் கருதி முற்பட ஒளிவிரியாநின்ற விமானமொன்றனை நிறுவிப் பெரிய தவத்தினை இயற்றுதற்கிடமான அச்சுனையின் மருங்கு அவ்விமானத்தின்கண் மூத்தபிள்ளையாரை எழுந்தருளச்செய்து வழிபாடு செய்தனன். (வி - ம்.) சிலதர் - பணியாளர். வைகலும் - நாடொறும். திருமால் தவமாற்றுகின்ற சுனையுமாம். உலவை - கொம்பு. (15) | ஆத லானவண் வைகி யாருயி ரல்லன் முற்றும றுத்துயர் | | நீதி வாழ்வரு ளேந்தல் செங்கழு நீர்வி நாயக னாயினான் | | தீது தீரிய வன்ன வன்கழல் சென்று தாழ்ந்தவ லாரிபின் | | நாத னாலய நன்று சூழ்ந்துந றுஞ்சு னைக்கணி றுத்தினான். |
(இ - ள்.) இங்ஙனம் இந்திரனால் செங்கழுநீர் மலரிட்டு வழிபாடு செய்யப்பட்டமையால், அவ்விமானத்திலே எழுந்தருளியிருந்து அரிய உயிர்களின் துன்பமனைத்தும் அகற்றி அறநெறி வாழ்க்கையினை வழங்கும் அவ்வண்ணல் செங்கழுநீர் விநாயகன் என்னும் திருப்பெயருடையன் ஆயினன். தனது தீவினை தீரும்பொருட்டு அச்செங்கழுநீர் விநாயகன் திருவடிகளை எய்தி வணங்கிய இந்திரன் பின்னர் இறைவனுக்கு ஒரு திருக்கோயில் பெரிதாக அமைத்து நறிய அச்சுனையிடத்தே நிலைநிறுத்தினன். (வி - ம்.) அவண் - அவ்விடத்தே. நீதி - அறம். தீரிய - தீர்தற்கு. நாதன் - குருநாதன், முருகன். (16) | காலை நண்பகன் மாலை யுங்கடி கொண்ட லர்ந்தொளிர் காவியும் | | சோலை நீர்நிலன் வல்லி யிற்சுரும் பார்க்கு மேனைய பூக்களும் | | மேலை நாட்டணி யுண்டி மற்றுமெண் வேலை மாக்கடல் போனிரைத் | | தாலை யம்புகுந் தாக மத்துள வாறு பூசனை யாற்றினான். |
(இ - ள்.) காலை நண்பகல் மாலை என்னும் முப்பொழுதினும் நறுமணமுடைத்தாக மலர்ந்து விளங்காநின்ற அச்செங்கழுநீர் மலரோடே, சோலைகளினும் நீர்நிலையினும் நிலத்தினும் கொடிகளினும் வண்டுகள் ஆரவாரித்தற் கிடனாக மலர்ந்துள்ள பிறபூக்களையும் விண்ணாட்டவர் உண்டியாகிய அமிழ்தத்தினையும் பிறவும் கருதாநின்ற கரையினையுடைய பெரிய கடல்போலப் பரப்பித் திருக்கோயிலின்கட் புகுந்து சிவாகமத்திலே கூறப்பட்ட முறைப்படி வழிபாடு இயற்றினன். (வி - ம்.) காவி - செங்கழுநீர். வல்லி - கொடி. சுரும்பு - வண்டு. எண்வேலை ; வினைத்தொகை. வேலை - கடற்கரை. (17) |