பக்கம் எண் :

894தணிகைப் புராணம்

 அருச்ச னைப்பணி யின்ன வாறுமுப் போதும் வைகலு மாற்றுழி
 விருச்சி கத்துறு மார னாண்மிளிர் பூர ணைக்கண்வி சாகனார்
 திருச்சி றப்பமு னின்ற னர்திக ழன்பு பொங்க வலாரிமென்
 தருச்சி றந்தபன் மாம லர்த்திர டாள்க டூய்த்தொழு தேத்தினான்.

(இ - ள்.) இவ்வாறு நாடோறும் மூன்றுபொழுதினும் வழிபாட்டுத்திருப்பணி புரிந்துவருங்கால், கார்த்திகைத்திங்களின்கண் மாரன்நாள்கூடி விளங்காநின்ற பூரணையிலே முருகப்பெருமான் அழகுமிக அவ்விந்திரன் முன்னர் எழுந்தருளினன். அவ்விந்திரன் பேரன்பு பொங்க மெல்லிய கற்பகமரத்தின் மலர்த்திரளை அப்பெருமானுடைய திருவடிகளிலே தூவித்தொழுது வாழ்த்தினன்.

(வி - ம்.) விருச்சிகம் - விருச்சிக ராசி. விசாகனார் - முருகன்.

(18)

 அருள்பொழி முகங்கள் போற்றி யலர்விழிக் கமலம் போற்றி
 மருமலர்க் குவளை பூத்த வரையுறழ் திணிதோள் போற்றி
 பெருவர மளிப்ப நீண்ட பேரெழின் மணிக்கை போற்றி
 இருள்வினை துகைத்துச் சேந்த விணைமலர்ப் பாதம் போற்றி.

(இ - ள்.) அருண்மழையைப் பொழிகின்ற ஆறுதிருமுகங்களும் போற்றி! மலர்ந்த பன்னிரு திருவிழித்தாமரைகளும் போற்றி! மணமுடைய குவளை மலர்மாலை பொலிவுற்ற மலையை ஒத்த திருத்தோள்கள் போற்றி! பெரிய வரங்களை அடியார்க்கருளுதற்கு நீளாநின்ற அழகிய கைகள் போற்றி! மயக்கத்தால் வரும் இருவினையையும் துகைத்தலானே சிவந்த மலர்போன்ற திருவடிகள் போற்றி!

(வி - ம்.) போற்றி - காத்தருள்க என்னும் பொருள்படுமொரு சொல். வணக்கம் எனினுமாம்.

(19)

 பேரரு ளுடையா னென்னும் பெற்றிமை யுலகோர் தெள்ளக்
 கூரிருண் மலத்தி னாழ்ந்து கொட்புறு மிழுதை யேற்கும்
 சீரருள் புரிந்து தேவர் சிறையினைச் சீத்துக் காத்த
 ஆரருள் போற்றி யாறா யிரமுறை போற்றி போற்றி.

(இ - ள்.) இயல்பாகவே நீ பேரருள் உடையை என்னுமியல்பினை உலகினர் தெளிந்து கொள்ளும்படி கூர்த்த ஆணவமலத்திலே முழுகிப் பிறப்பிறப்புகளிலே சுழலாநின்ற பொய்யனாகிய எளியேனுக்கும் நினது சிறந்த அருளைப் புரிந்து தேவருடைய சிறையினை அகற்றிப்பாதுகாத்த நிரம்பிய அருள்போற்றி ; அவ்வருட்கு ஆறாயிரமுறை போற்றி ! போற்றி!

(வி - ம்.) பெற்றிமை - தன்மை. தெள்ள - தெளிய. இருண்மலம் - ஆணவமலம். ஆறாயிரம் என்றது அளவிறந்த என்றவாறு.

(20)