பக்கம் எண் :

இந்திரன் அருள்பெறு படலம்895

 மண்ணுயி ரனைத்து மல்க மழைமுகி லானாய் போற்றி
 விண்ணுயி ரனைத்து மல்க மிளிரமிழ் தானாய் போற்றி
 கண்ணுருக் காணக் கண்ணுட் கனலுரு வானாய் போற்றி
 எண்ணுயிர்த் தொழின்மை முற்ற விரந்தர மானாய் போற்றி.

(இ - ள்.) நிலத்தின்கண் வாழும் உயிர்கள் பெருகும்படி மழை முகிலானவனே போற்றி ! வானுலகத்தின்கண் வாழும் உயிர்கள் தழைத்தற்கு விளங்காநின்ற அமிழ்தமானவனே போற்றி ! கண்கள் உருவத்தைக் காணும்பொருட்டு அக்கண்ணூடே தீயாய் நிற்போனே போற்றி! கருதாநின்ற உயிர்களின் வினைகள் முற்றுப்பெற்றுழி அவை உறைதற்குரிய இன்பவெளியானவனே போற்றி !

(வி - ம்.) மிளிரமிழ்து - வினைத்தொகை. தொழின்மை - வினை. இரந்தரம் - வானம்.

(21)

 பரிதிமெய் யுடற்றும் வெப்பின் பரிதியாங் கடவுள் போற்றி
 வருமதி குளிர்க்குஞ் சீத மதிப்பெருங் கடவுள் போற்றி
 செருவழல் பொடிக்குஞ் சீற்றச் செருவழற் கடவுள் போற்றி
 கருதுளங் கடவு மாவி கடவுயிர்க் கடவுள் போற்றி.

(இ - ள்.) ஞாயிற்று மண்டிலத்தின் உடலையும் வெதுப்பும் வெப்பமுடைய ஞாயிறாகிய இறைவனே வணக்கம் ! நாடோறுமெழுகின்ற திங்கள் மண்டிலத்தையும் குளிர்ப்பிக்குங் குளிர்ச்சியுடைய பெரிய திங்களாகிய இறைவனே வணக்கம் ! போரின்கண் தீக்கடவுளும் சாம்பராகும் சினமிக்க செருவின்கட் தீக்கடவுளானவனே வணக்கம் ! நினைக்குங் கருவியாகிய மன முதலியவற்றைச் செலுத்தும் உயிரையும் உண்ணின்று செலுத்தும் பேருயிராகிய பெருமானே வணக்கம் !

(வி - ம்.) ஞாயிற்றின் ஞாயிறே திங்களின் திங்களே தீயின்றியே உயிரின் உயிரே என்றவாறு.

(22)

 மாமனா ரினைய கூற மருகனார் மகிழ்ந்து வார்விற்
 காமனார் கொடுத்த வாக்கைக் கண்ணனார் முகத்தை நோக்கித்
 தூமனா மோலி வேந்த சொல்லுதி விழைவை யென்ன
 ஏமனாய்ப் பூழ்த்த கேழ லெயிற்றினர்க் கிறைஞ்சிக் கூறும்.

(இ - ள்.) மாமனாராகிய இந்திரன் இங்ஙனம் வாழ்த்தாநிற்ப மருகனாராகிய முருகப்பெருமான் உளமகிழ்ந்து, நெடிய வில்லையுடைய காமனார் வழங்கிய உடம்பிற் கண்ணையுடைய அவ்விந்திரன் முகத்தைப் பார்த்து, தூய மணிமுடிவேந்தனே, நினது வேண்டுகோளைத் தெரிவிப்பாயாக என்று பணித்தருள, அவ்விந்திரன் மறலியைத் துகள்படுத்த, கேழற் பல்லினையுடையோனுக்குக் கூறுவான்.

(வி - ம்.) இந்திரனுக்கு உடம்பெல்லாம் கண்ணாதற்கு அவன் கழிபெருங் காமங் காரணமாகலின் காமனார் கொடுத்த வாக்கைக் கண்ணனார் என்றார். ஏமனார் - மறலி. பூழ்த்த - துகள்படுத்திய. கேழல்