பக்கம் எண் :

896தணிகைப் புராணம்

- பன்றி. சிவபெருமானுடைய செயலையும் உடைமையையும் முருகப்பெருமானுக் கேற்றி ஏமனார்ப்பூழ்த்தகேழ லெயிற்றினார்க் கிறைஞ்சி என்றார்.

(23)

 தானவர் கவர்ந்த செல்வஞ் சகலமு மீட்டா யன்றே
 ஈனவை பெறுதல் வெஃகி யெம்பிரான் றிருமுன் போந்தேன்
 வானவர் தாமும் போந்தா ரவரவர் வரங்கள் கொண்மார்
 கானவிர் கடப்ப மாலைக் கடவுளென் றிதுவுஞ் சொற்றான்.

(இ - ள்.) எம்பிரானே ! நீ எம்மிடத்திருந்து அசுரர் கவர்ந்து கொண்ட செல்வமனைத்தும் மீட்டுக்கொணர்ந்தனை யல்லையோ. இவ்விடத்தே அவற்றைப் பெறவிழைந்து திருமுன்னர் வந்தேன். மேலும் ஏனைய தேவர்களும் அவரவர் விரும்பிய வரங்களைப் பெறுதற்கு வந்தனர். மணம் விரியும் கடப்பமாலையணிந்த கடவுளே என்று விண்ணப்பித்து(ப் பின்வரும்) இதனையும் கூறினன்.

(வி - ம்.) ஈன் - இவ்விடம். கொண்மார் - கொள்ளற்கு. கான் - மணம்.

(24)

 துறக்கம்வாழ் குவளை வாங்கிச் சுனையிடைக் கால மூன்றும்
 முறுக்கவிழ் மலர்கண் மூன்று முகிழ்க்குமா நிருமித் திட்டேன்
 நறைக்கடம் பணிந்தோய் நாளு நயந்தணிந் துலக மெல்லாம்
 இறக்குமந் நாளு மன்னி யிருக்கவக் கழுநீர் மாதோ.

(இ - ள்.) துறக்கநாட்டின்கண் உளதாகிய செங்கழுநீர்க் கொடியைக் கொணர்ந்து ஈண்டுள்ள சுனையின்கண் நாடோறும் முப்பொழுதினும் முறுக்குடையும் மும்மூன்று மலர்கள் மலருமாறு நாட்டியுள்ளேன். தேன்றுளிக்கும் கடப்பமாலையணியும் தேவதேவ ! நீ அதனை விரும்பியணிந்துகொள்ள அக்கழுநீர் உலகமனைத்துமிருக்கு நாளெல்லாம் நிலை பெற்றிருக்க வரமருள்க!

(வி - ம்.) நறை - மணமுமாம். அணிந்து - அணிய. மன்னி -
நிலைபெற்று.

(25)

 இம்மல ரணியுங் காறு மேழையேற் கிடரின் றாக
 செம்மனீ காட்சி தந்த திருத்தகு மிந்த நாளில்
 பைம்மலர்ச் சுனைநீர் தோய்ந்தோர் பருகினோர் தெளித்துக்கொண்டோர்
 வெம்மைவல் வினைக ளோப்பி விளங்குநின் னுலகஞ் சேர்க.

(இ - ள்.) இச் செங்கழுநீர் மலரை நீ யணிந்து கொள்ளுங்கால மெல்லாம் எளியேனுக்கு இடர் இல்லையாக வரமருள்க. பெருமானே ! நீ எளியேனுக்குக் காட்சி வழங்கிய செல்வத் தகுதிபெற்ற இந்தநாளிலே ஆண்டுதோறும் பசிய இச்செங்கழுநீர் மலர்ச் சுனையின்நீரிலே ஆடியோரும் அதனைப் பருகினோரும் தலைமிசைத் தெளித்துக்கொண்டோரும் ஆகிய அன்பரனைவரும் வெவ்விய வலிய தீவினைகளை அகற்றித்திகழாநின்ற நின்னுடைய கந்தவுலகினை எய்தும்
படிவரமருள்க.